ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, யூதர்களுக்கு மற்சூ, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…

தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை தொடங்குவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விடுதலைப் பண்பாட்டை அடுத்த தலைமுறையின் கைகளுக்கு கடத்துவோம் என தெரிவித்துள்ளது.
மே12ம் நாள் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக உலகத் தமிழர்களால் தொடங்குகின்றது.
2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை, மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.
போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.
இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.
இரத்தம் தோய்ந்த தமது வரலாற்றின் வலிகளை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கடந்தும் பண்பாடாக 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு உள்ளான அ10ர்மேனியர்கள் ‘ஹரிஸ்ஸா’ உணவையும், யூதர்கள் ‘மற்சூ’ உணவையும் கொண்டிருப்பது போல், ஈழத்தமிழர்கள் நாமும், ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யினை எமது அடுத்த தலைமுறையிடம் கடத்தும் ஓர் விடுதலைப் பண்பாடாக இதனை முன்னெடுப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.