தமிழ் பயணம் 1986

ஒரு சரக்குக் கப்பலில் ஏறி கனடா வந்து சேரும் முயற்சியில் ஈடுபட்ட 155 தமிழர்களும் 15 நாட்கள் கடல் பிரயாணத்தின் பின்னர் ‘நாங்கள் கனடாவின் மொன்ரியல் மாநகரை அண்மித்துவிட்டோம்’ எனக் குதூகலித்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு. நடந்தது என்ன?

1986ம் ஆண்டு… ஓகஸ்ட் மாதம்.. 11ம் திகதி…! அந்த 155 கனடியத் தமிழர்களதும் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். ஆம் அவர்கள் எல்லோருக்கும் மறுவாழ்வு கிடைத்த தினம் அது.

அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் நடுக்கடலில் வைத்து 155 தமிழர்களும் சரக்குக் கப்பலிலிருந்து இறக்கப்பட்டனர். Lifeboats என்று அழைக்கப்படும் ஆபத்துக்காலத்தில் உயிர்தப்ப உபயோகமாகும் சிறு படகுகள் இரண்டிற்குள் அவர்கள் ஏற்றிவிடப்பட்டார்கள். “இந்தப் படகுகளில் ஏறிப் போங்கள்… இன்னும் சிறிது தூரம் போனால் நீங்கள் மொன்ரியால் கரையை அடைந்துவிடலாம்” என்று சரக்குக் கப்பலின் கப்ரன் சொல்லி அவர்களை நடுக்கடலில் விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார்.

நடுக்கடல்… 155 பேரும் இரண்டு சிறிய படகுகளில் நெருக்குப்பட்டபடி உட்கார்ந்திருக்கிறார்கள். எழுந்து நிற்கவே முடியாது. உப்புக்காற்று… குளிர்… சுற்றிலும் கடல்.. பனிப்புகார் நிறைந்து கிடந்ததால் தூரத்தில் எதுவும் தெரிவதாக இல்லை. மூன்று நாட்கள் ஆகின.. ஆனால் இன்னும் கரை தெரிவதாக இல்லையே. குழந்தைகள் வீரிட்டு அழுதன. பெண்கள் கண்ணீர் விட்டனர்.. மரத்துப்போன நிலையில் ஆண்களில் பலரும் எதுவும் புரியாமல் திணறினர். பெரும் அலைகள் அடித்தன.. கடல் கொந்தளித்தது. பாரம் தாங்காமல் அச் சிறு படகுகளோ தத்தளித்தன. மரணபயத்தால் அந்த 155 உள்ளங்களும் அல்லாடிக்கொண்டிருந்த நேரம் அது.

பனிப்புகாரினிடையியே கடலையே பார்த்துக் கொண்டிருந்த 155 பேருள் ஒருவருக்கு தூரத்தே விசைப்படகு ஒன்று கண்ணுக்குத் தென்பட்டது. மரணத்தின் பிடியிலிருந்த 155பேரும் கதறி ஒலம் இட்டனர். கூக்குரல் இட்டனர். கைகளை ஆட்டிக் காட்டினர். 155 தமிழருக்கும் உயிர்வாழ இருந்த ஒரே நம்பிக்கை அவர்கள் கண்ணில் தெரிந்த அந்த விசைப்படகு மட்டும்தான்.

தூரத்தே தெரிந்த அந்த விசைப்படகில் இருந்தவர்கள் மீன்பிடித் தொழிலாளர்கள். நியூபவுண்லாந்தின் சென்ற்மேரி கடலோரக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கம்போல அன்று மீன்பிடிக்கச் சென்றுகொண்டிந்தார்கள். அதிஸ்டவசமாக தமிழ் அகதிகள் வந்த சிறு படகுகள் அவர்கள் கண்களிலும் பட்டுவிட்டது. படகுகளை உற்று நோக்கிய மீனவர்கள் அதிர்ந்துபோனார்கள். கொந்தளிக்கும் அபாயகரமான கடலில் சிறு படகுகளில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை அவர்கள் தம் வாழ்நாளில் என்றும் கண்டதேயில்லை. இன்னும் சற்று நேரம் தாமதித்தால் அந்தச் சிறுகப்பல்களை அலைகள் தூக்கி வீசும். கரையில் இருந்த பாறைகளுடன் மோதவைக்கும். சுக்குநூறாக்கும். விசைப்படகின் கப்ரன் பதறிப்போனார். இரண்டு சிறு படகுகளையும் நோக்கித் தன் கப்பலை செலுத்தினார்.

சிறு படகுகளில் இருந்தவர்கள் விசைப்படகு தம்மை நோக்கி வருவதைக் கண்டனர். ‘நாம் இலங்கைத் தமிழ் அகதிகள்.. மொன்ரியால் நகருக்கு போகவேண்டும். உதவுங்கள்’ என தம்மால் முடிந்தவரை – உரத்த குரலில் – ஆங்கிலத்தில் கதறினர். அந்தக் கதறலிலிருந்து ‘Help’, ‘Sri Lanka’, ‘Refugee’ ‘Montreal’ என்ற ஒரிரு சொற்களை மட்டுமே கப்ரனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் அந்த நிலையில் அந்தச் சொற்களா முக்கியம்? தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் சிறு படகுகளில் இருந்தவர்களுக்கு ஆபத்தானது என்பதுதான் கப்ரனுக்கு அதி முக்கியமானதாகத் தெரிந்தது. விசைப்படகு அருகே வந்தது. ஈழத்தமிழ் அகதிகளின் கைகளை கனடிய மீனவர்களின் கைகள் பற்றி;க் கொண்டன. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 155 தமிழரும் காப்பாற்றப்பட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டனர். அது மட்டுமல்லாமல் கனடாவினால் அகதிகளாகவும் ஏற்கப்பட்டனர்.

இந்த மயிர்க்கூச்செறியும் உண்மைச்சம்பவம் நடந்து இன்று முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன.

நியூபவுண்லாந்து மக்களும், கனடிய அரசாங்கங்கமும் செய்த மனிதாபிமானச் செயல் இன்று தமிழ்க் கனடியர்களது எண்ணங்களில் மட்டுமல்ல கனடிய சரித்திரத்திலும் இடம்பெற்றுவிட்டது. கனடாவின் அரசாங்கத்தை, நியூபவுண்லாந்து மக்களின் செயலை மட்டுமல்ல, ஆபத்துக்களைப் பொருட்படுத்தாது புதிய வழியொன்றில் கனடாவிற்கு பயணித்த அந்த 155 தமிழர்கள் மறுவாழ்வு பெற்ற தினத்தையும் சேர்த்துக் கொண்டாடவேண்டியது எம் கடமை. குறிப்பாக, கடலில் அறிமுகமற்ற படகுகளைக் கண்டதும், அரசாங்கத்திற்கு அறிவித்துவிட்டு ‘கனடா கடற்படை வரும்போது வரட்டும்’ என்று இருந்துவிடாமல் தானே 155 பேரையும் காப்பாற்ற முன்வந்த விசைப்படகின் கப்ரின் என்றென்றும் எம் நன்றிக்கு உட்பட்டவர்.

இதற்காக கனடிய தமிழர் பேரவை ஒரு நன்றிகூறல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செயதிருக்கிறது. ஆம். 155 அகதிகளதும் கப்பல் பயண மீள்நினைவும், அதையொட்டி நியூபவுண்லாந்து மக்களுக்கு நன்றி தெரிவித்தலும் ‘தமிழ் பயணம் 1986’ என்ற பொது நிகழ்வாக எதிர்வரும் ஓகஸ்ட் 11ந்திகதி முதல் 14ந்திகதி வரை நியூபவுண்லாந்து மாநிலத்தின் சென்ற் ஜோன்ஸ் நகரில் நம் அனைவராலும் கொண்டாடப்படவிருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதற்காக அங்கு செல்கிறோம். நீங்களும் வாருங்கள். கலந்து கொள்ளுங்கள். ஆதரவு தாருங்கள். நன்றி தெரிவித்துக் கொண்டாடி சிறப்புச் செய்யுங்கள். ஓகஸ்ட் மாதம் 13ந்திகதி ‘தமிழ் பயணம் 1986’ சிறப்பு நிகழ்வாக ஒரு மாபெரும் விருந்துபசாரமும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு ‘தமிழ் பயணம் 1986’ குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்ட திரையிடலும் இடம்பெறும். நம் தமிழர்களைக் காப்பாற்றிய கப்பல் கப்ரினுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்படும். அங்கு ஒரு நினைவு நடுகல் இடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு “வாருங்கள்.. வாருங்கள்” என உங்களை மீண்டும் அழைக்கிறோம்.

ஒருவேளை நியூபவுண்லாந்துக்கு உங்களால் வர முடியாது போகுமாயின் நாம் ரொறன்ரோவில் ஒழுங்கு செய்யும் ‘தமிழ் பயணம் 1986’ கண்காட்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இக்கண்காட்சியில் ‘தமிழ் பயணம் 1986’ குறித்த பத்திரிகை செய்திகள், படங்கள் என்பனவற்றுடன் 30 வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பல்வேறு செய்திப் படங்களும் இடம் பெறும். அதுமட்டுமல்லாமல் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் நேரடியாக பங்கு கொண்ட பலரையும் நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.

வாருங்கள்… ஆதரவு தாருங்கள். பெருமை செய்யுங்கள். ‘தமிழ்ப்பயணம் 1986’ கனடிய தமிழரின் நற்பெயரை மேலும் உயர்த்தி வைக்கட்டும்.

tamil journey