அகதிகளை கனடாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தொய்வு

துருக்கியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை காரணமாக சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்துவரும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துருக்கியில் இராணுவத்தினரின் ஒரு தரப்பினர் அங்கு இராணுவப் புரட்சியை ஏற்படுத்த கடந்த வாரம் எடுத்திருந்த முயற்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து, அந்த முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது.

இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கப் பணியாளர்கள் பலர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக அங்குள்ள சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய துருக்கியில் உள்ள 549 சிரிய அகதிகள் கனடாவிற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் போக்குவரத்தை சரிசெய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் 3,815 விண்ணப்பங்கள் அந்த நாட்டில் இன்னமும் பரிசீலனையி்ல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையிலும் தாம் இது தொடாபில் துருக்கிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Refugee-Crisis