ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடகம் (Photos)

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக, கனடியத் தமிழர் பேரவையின் ஆதரவில், திருமதி நிரோதினி பரராஜசிங்கத்தின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்ட ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடக நிகழ்ச்சி கடந்த ஜூலை 17ந் திகதி ஞாயிற்றக்கிழமை ரொறன்ரோவில் மிகச்சிறப்பாக நிறைவேறியது.

இதன் மூலம் 25,000 டொலர்கள் மதிப்புள்ள காசோலையும் அரங்கில் வைத்து ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதி சேகரிப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.

சுமார் மூன்றுமணிநேரம் பார்வையாளர்கள் மனதைக் கொள்ளை கொண்ட இந்த ‘யக்ஞசேனி’ நாட்டிய நாடகம் மகாபாரத திரௌபதியின் கதையாகும். நவீன ஒலி, ஒளி தொழில்நுட்பங்களை இணைத்து பார்வையாளர்கள் பிரமித்துப்போகின்ற வகையில் – மிகப்பிரமாண்டமான முறையில் – இந்த இதிகாச நாட்டிய நாடகம் மேடையில் அரங்கேறியிருந்தது.

நடன அமைப்பிலும், பாடல்களின் இசையமைப்பிலும் செவ்வியல் தன்மை சற்றேனும் குன்றாதவகையில் அதேசமயம், பழமையும் புதுமையும் ஒருங்கே இணைந்திருந்தபாணி அனைத்துத் தரப்பிடமும் பெரும் வரைவேற்பைப் பெற்றிருந்தது.

நாடகத்தின் எழுத்து, இயக்கம், நடன அமைப்பு என்பனவற்றை தமிழகத்தில் இருந்து வருகை தந்த மதுரை ஆர். முரளீதரன் செய்திருந்தார்.

அவரது துணைவியார் உமா முரளீதரன் யக்ஞசேனியாக மேடையில் தோன்றி தன் நடனத்திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.

இவர்கள் இருவரையும் தவிர்த்து கதைமாந்தர்களாக மேடையில் தோன்றிப் பரவசப்படுத்திய 60க்கும் மேற்பட்ட நடிகர்களும் கனடா வாழ் கலைஞர்கள் என்பது இங்கு சிறப்புறக் குறிப்பிடப்படவேண்டியதாகும்.

toronto drama (4)

toronto drama (5)

toronto drama (6)

toronto drama (7)

toronto drama (8)

toronto drama (9)

toronto drama (1)

toronto drama (2)

toronto drama (3)