பிரபல இசையமைப்பாளர் மூலம் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகும் கனடா வாழ் இலங்கைத் தமிழ் பெண் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் (Photos)

உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை, உற்றார் உறவினர்கள், செல்லப்பிராணிகளை தவிக்க விட்டு கையிற்கு எட்டியதை எடுத்துக் கொண்டு உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றோம்.

எமது அயராத உழைப்பினால் பல்வேறு துறைகளில் மிக முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றி உலகமெங்கும் வசித்து வரும் நாம் இசை, நடனம், விளையாட்டு, வேறு பல துறைகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளதால், நமது பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து அவர்களின் திறமைகளுக்கேற்ப பயிற்றுவிக்கின்றோம்.

இவ்வாறு பலர் கலைத் துறையில் திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இச்சூழலில் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ஈழத்தமிழ் மக்களின் மீது ஒப்பற்ற அன்பும் கொண்ட திரு. டி.இமான் தாம் இசையமைத்த சாட்டை திரைப்படத்தில் கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெண்ணான எலிசபெத் மாலினிக்கு வாய்ப்பளித்துள்ளார். அவரின் திறமை உலகிற்கு அறியத்தரப்பட்டது. அத்துடன் அவரின் ஆர்வமும், ஆற்றலும் அவருக்கு துணையாக இருந்து. அவருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.

மேலும் சென்னையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களில் இசையமைப்பாளர் திரு. டி.இமான் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் தமிழ் திரையுலகின் நிகழ்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. ஆனால் ஈழமக்களின் முன்னேற்றத்துக்கும் ஈழத்தமிழ் பிள்ளைகளின் திறமையினை உலகெங்கும் காட்ட முயற்சிக்கும் குறிப்பிடத்தக்க சிலருக்கு மட்டுமே எமது மக்கள் துணையாக நிற்பர்.

lakshmi (2)

அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி கனடாவில் நடைபெற்ற இசையமைப்பாளர் திரு. டி.இமான் அவர்களின் இசைநிகழ்சியில் மக்கள் திரளாக கலந்துகொண்டு தங்களது ஆதரவையும் அன்பையும் வெளிக்காட்டினர். கனடாவில் நடந்த கலைநிகழ்சிகளில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்வுக்கு பிறகு திரு. டி,இமான் இசைநிகழ்வுக்கே மக்கள் பெரும் ஆதரவு அளித்தது மக்கள் அறிந்ததே.

இசைநிகழ்வுக்காக கனடா வந்த திரு. டி.இமான் அவர்கள் தமது இசைநிகழ்சியில் கனேடிய கலைஞர்களுடன் இணைந்து மேடையில் பாடியதும் அவர் ஈழத்தமிழ் மக்கள் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டியது. மேலும் கனடாவில் நிகழ்வின் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஒருவர் ஈழத்துகலைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பீர்களா என கேள்வி எழுப்பினார். திறமையானவர்களுக்கு தாம் கண்டிப்பாக வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்.

அதன் வெளிப்பாடாக தற்போது திரு. டி.இமான் அவர்கள் கனடாவில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான லக்ஷ்மி க்கு, ஜெயம்ரவி – ஹன்சிக்கா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்து பிண்ணனி பாடகியாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

குரல் பதிவிற்காக சென்னை சென்றிருந்த லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் 24ம் தேதி குரல் பதிவினை முடித்து இன்று ரொரன்ரோ வந்தடைந்தார். திரு டி.இமான் அவர்களின் இசையில் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

திரு. டி இமான் அவர்களின் பரந்த மனப்பான்மைக்கும் அவர் நமது இலங்கைத் தமிழர்களில் வைத்திருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் நாங்கள் அனைவரும் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் உள்ளவர்களாக இருப்போம். இன்னும் பற்பல இலை மறைகாய்களாக இருக்கும் நமது எதிர்காலக் குழந்தைகளுக்கு பல வாய்ப்புக்கள் கிடைக்க வாழ்த்துவோம்.

தகவல்: சுகந்தி ராஜன்-

lakshmi (1)