8 வருட வெள்ளை மாளிகை அனுபவம்.. தாய்மை உணர்வுடன் பிரசாரம் செய்த‌ மிச்செல் ஒபாமா (Video)

அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா ஜனநாயக கட்சியின் மாநாட்டில் ஹிலாரி கிளின்டனை ஆதரித்து உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தினார். அந்த உரை இதோ…

”நன்றி, உங்களுக்குத் தெரியும் எட்டு வருடங்களுக்கு முன்னால் என் கணவர் ஏன் அதிபராக‌ வேண்டும் என்று நான் உங்களுடன் பேசினேன். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது அவரது குணம், நேர்மை மற்றும் அன்பைப் பற்றி உங்களிடம் கூறியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அமெரிக்காவிற்காக எங்களின் பணியை நாங்கள் சிறப்பாக ஆற்றியுள்ளோம்.

என் மகள்களைப் பற்றியும் உங்களிடம் கூறியுள்ளேன். அவர்களுடன் வெள்ளை மாளிகையில் கழித்த காலம், வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்துள்ளது. இங்கு என் குழந்தைகள் ‘பப்ளி’ குழந்தைகளாக நுழைந்து எட்டு வருடங்களில் இளம் பெண்களாக வளர்ந்துள்ளனர்.இந்தப் பயணம் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நாங்கள் வாஷிங்டனுக்கு வந்த பிறகு என் குழந்தைகளைப் புதிய பள்ளியில் சேர்த்த முதல் நாள் அனுபவம் எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது. நான் அந்த நாட்களை மறக்கவே இல்லை.

அது ஓர் அழகான குளிர்கால காலை நேரம், என் குழந்தைகளைப் பார்த்தேன். ஒரு கருப்பு நிற SUV காரில் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் முகங்கள் ஜன்னல் ஓரமாக நன்றாக‌ப் பதிந்து வெளியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான். ”நாம் என்ன செய்தோம்?”. அந்த நொடியில் நான் ஒரு புரிதலுக்கு வந்தேன். இந்த வெள்ளை மாளிகை நாட்கள் இவர்களுக்கு ஒரு சிறப்பான அடித்தள‌த்தை, அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.

நானும் ஒபாமாவும் தினமும் எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வின் சவால்களை எப்படி, இந்த இடத்தில் இருந்து எதிர் கொள்வது என்பதைக் கூறி வந்தோம். அவர்களிடம் தந்தையின் குடியுரிமை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளுக்கும், தொலைக் காட்சிகளில் கூறப்படும் புள்ளிவிவரங்களுக்கும், தவறான விமர்சனங்களையும் எப்படி எதிர்கொள்வது என்று கூறி அவர்களை முன்கூட்டியே தயார்ப்படுத்தி வந்தோம். சிலர் நம்மிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டால் நாமும் அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. நமது நோக்கம் எப்போதெல்லாம் அவர்கள் கீழே போகிறார்களோ அப்போதெல்லாம் நாம் ஒரு படி மேலே செல்கிறோம் என்பது தான்.

நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும், நாங்கள் பேசும் ஒவ்வோரு வார்த்தையையும் அவர்கள் கவனிக்கிறார்கள். ஒரு பெற்றோர்களாக அவர்களுக்கு மிக முக்கியமான ரோல்மாடல்களாக விளங்கியுள்ளோம். மேலும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதிபராக பராக்கும், ஃப்ர்ஸ்ட் லேடியாக நானும் எங்கள் வேலையைச் சரியாகச் செய்துள்ளோம். எங்களுக்குத் தெரியும் எங்களது வார்த்தைகளும், செயல்களும் எங்கள் குழந்தைகளுக்கானவை மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்காவின் குழந்தைகளுக்கானவை என்று. அமெரிக்க குழந்தைகள் எங்களிடம் கூறியுள்ளனர். ”உங்களை நான் டிவியில் பார்த்துள்ளேன். உங்களைப்பற்றி பள்ளியில் கட்டுரை எழுதியுள்ளேன். கருப்பாக உள்ள சிறுவர்கள் சிலர் என் கணவரைப் பார்த்து, அவரின் நம்பிக்கை நிறைந்த கண்களைப் பார்த்து வியந்து, எனது தலைமுடி உங்களைப் போன்ற இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

அதில் எந்தத் தவறுமில்லை. இந்த நவம்பர் மாதம் வாக்களிக்கப்போகும் போது ஒரு திடமான முடிவோடு செல்வோம். ஜனநாயகக் கட்சியோ, குடியரசு கட்சியோ, வலதுசாரிகளோ இல்லை இடது சாரிகளோ. இந்த தேர்தல் மட்டுமல்ல, இனிவரும் எல்லா தேர்தல்களிலுமே யார் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறார்களோ, அடுத்த நான்கு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு யார் குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்க உள்ளோம் என்று முடிவு செய்துகொள்வோம். இந்த முறை நான் இந்த பொறுப்புள்ளவர்களில் ஒருவராக ஒரு நபரை பார்க்கிறேன். அமெரிக்க அதிபர் என்ற பெயருக்குப் பொருத்தமானவர் என்று அவரை பார்க்கிறேன். அவர்தான் என் தோழி ஹிலரி கிளின்டன்.

அவர் நாட்டுக்காகவும், நாட்டின் குழந்தைகளுக்காகவும் தனது வாழ்க்கையில் பல விஷயங்களை செய்துள்ளார். அவர் குழந்தைக்காக மட்டுமல்ல நாட்டின் உள்ள ஒவ்வொரு குழந்தையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. குழந்தைகளிடம் பெற்றோர்கள் வெறும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் வாழ்க்கைக்கான கனவுகளை அடைய சொல்லி தர வேண்டும்.அது அவர்களை என்னவாக வர வேண்டும் என்பதை நோக்கி நகர்த்தும்.

ஹிலரியின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்ததே. அவரின் செயல்பாடுகள் அமெரிக்க குழந்தைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. அவர் எட்டு வருடங்களுக்கு முன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. அதனால் அவர் துவண்டு விடவில்லை. கோபப்படவில்லை, அதேபோல் தோல்வியடைந்துவிட்டோம் என்று வீட்டுக்குள் முடங்கிவிடவும் இல்லை. ஏனெனில் அவர் ஒரு மக்களின் ஊழியர். அவர் மீண்டும் நம் நாட்டுக்காக உழைக்க முன் நிற்கிறார். உலகம் முழுவதும் சென்று நமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இருக்கிறார். அவர் கடுமையாக உழைக்க முடிவு செய்துள்ளார். மக்களின் மதிப்பு மிகவும் உயர்ந்தது. அவர் எதிலிருந்தும் எளிதில் தன்னை வெளியேற்றிக்கொள்ளாத நபர், கடுமையாக வெற்றிக்காக போராடக்கூடியவர்.

எனக்கு ஹிலரியை நன்றாக தெரியும், அவர் அமெரிக்காவின் அதிபராக அனைத்துத் தகுதியும் கொண்டவர். அதனால் தான் இந்தத் தேர்தலில் நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன்.ஹிலரி ஒரு விஷயத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார். நமது குழந்தைகளுக்குச் சிறந்தவைகளை உருவாக்கி தரவேண்டும் என்பது தான் அது.

நான் தினமும் காலையில், அடிமைகளால் கட்டப்பட்ட அந்த வீட்டில் தான் எழுந்திருக்கிறேன். எனது இரண்டு மகள்களும் அங்கு தனது நாய்க்குட்டியுடன் விளையாடுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போது இதே இடத்தில் ஓர் பெண்ணை அமெரிக்காவின் அதிபராக பார்க்க விரும்புகிறேன்.

யாரும் அமெரிக்கா சிறந்த நாடு இல்லை என்று கூறவிடாதீர்கள். அமெரிக்கா ஏற்கெனவே உலகின் சிறந்த நாடாகத் தான் உள்ளது. உண்மையான தலைவர்களை விரும்புகிறேன். அமெரிக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்கி அவர்களை வழி நடத்தவும் தகுதியுள்ள ஒரு அதிபரை விரும்புகிறேன். அதற்காக நாம், நமது ஒவ்வொரு அவுன்ஸ் ஆர்வம், திறமை, அன்பை நாட்டுக்காக வழங்குவோம்.அதற்காக ஹிலரி கிளின்டனை அமெரிக்காவின் அதிபராக்குவோம்!

நமக்கான வேலைகளைத் தொடங்குவோம். அனைவருக்கும் நன்றி.

obama