ஆணாதிக்க சிந்தனை கொண்டவையா அமெரிக்க ஊடகங்கள்?

அதிபர் பதவிக்கு போட்டியிட நியமனம் செய்யப்பட்டாலும் கணவரின் நிழலில்தான் ஹிலரி இருக்க முடியும் என்பது போல அமெரிக்க நாளிதழ்களின் முன்பக்கத்தில் ஹிலரிக்கு பதிலாக பில் கிளிண்டனின் புகைப்படமே இடம்பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க வரலாற்றில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட நியமனம் செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை அண்மையில் ஹிலரி கிளிண்டன் பெற்றார். ஆனால், இது குறித்த செய்திகளை தாங்கி வெளிவந்த அமெரிக்காவின் பல்வேறு நாளிதழ்களிலும், முதல் பக்கத்தில் ஹிலரிக்கு பதிலாக அவரது கணவர் கிளிண்டன் இடம் பெற்றுள்ளது ஏன்?

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் பல நாளிதழ்களும், ஹிலரி கிளிண்டனின் புகைப்படங்களுக்குப் பதிலாக, அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டன் அல்லது அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் சார்பாக நியமனம் பெற, ஹிலரியுடன் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸின் பெரியளவிலான புகைப்படங்களை தாங்கி கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.

ஆனால், இதுகுறித்த கண்டனத்தை, இணையத்தில் மக்கள் பதிவு செய்ய வெகு நேரமாகவில்லை.

ஹிலரியின் புகைப்படத்துக்கு பதிலாக, பில் கிளிண்டனின் புகைப்படத்துடன் சிகாகோ ட்ரிபியூன் பத்திரிக்கையில் வந்த தலைப்பு செய்தியான ”நியமனத்தை பெற்றார் கிளிண்டன்” என்பதற்கு பதில் கூறும் வகையில், எரிக் ஹேவுட் ”ஒரு பணியிடம் மட்டும் தானே காலியாக உள்ளது” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

”வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனத்தை வென்ற கிளிண்டன்” என்ற தலைப்பிட்டு, பெர்னி சாண்டர்ஸின் பெரிய அளவிலான புகைப்படத்துடன் வெளிவந்த வால் ஸ்ட்ரீட் ஜார்னலை குறிப்பிடும் விதமாக, ”பாலின வேறுபாடு நீடிக்கிறது என்று சுட்டிக்காட்ட இதுவே மிக எளிதான ஆதாரம் ஆகும்; அமெரிக்க அதிபர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட முதல் பெண்ணாக இருந்தாலும் ஹிலரி என்றில்லை, எந்த பெண்ணாலும், முதல் பக்கத்தில் இடம்பெறமுடியவில்லை” என்று ஆனி ஹெலன் பெட்டர்சன் என்பவர் தனது டிவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகத்துக்கு வெளியே, ஒவ்வொரு நாள் காலையிலும் நாட்டில் உள்ள அனைத்து 50 மாநிலங்களிலும் வெளிவரும் அன்றைய நாளிதழ்களின் முன்பக்கம், கண்ணாடி பேழைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹிலரி கிளிண்டனின் நியமனத்துக்கு அடுத்த நாள் காலையில், இவ்வாறு கண்ணாடி பேழைகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட நாளிதழ்களின் முன்பக்க பட்டியலில் 19-இல்தான் ஹிலரியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், சில நாளிதழ்களில் முன்பக்கங்கள், ஹிலரியின் முந்தைய புகைப்படங்கள் அல்லது அவரது நியமன விழாவில் கலந்து கொண்ட பெண்களின் படங்களுடன் வெளிவந்துள்ளது.

அண்மையில் நடந்த ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் போது, திரையில் தோன்றிய ஹிலரி கிளிண்டனின் முகத்தை பெரிதாக வெளியிட்டு, அருகே சிறிய புகைப்படத்தில் அவரது கணவர் பில் கிளிண்டன் அவரை மரியாதையுடன் பார்ப்பது போல வெளியிட்டுள்ள ஆரஞ்சு கவுண்டி ரெஜிஸ்டர், ”அவரது கதை” என ஹிலரியை குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.

நேற்று காலை, செய்தி ஊடகங்களுக்கான அருங்காட்சியகத்துக்கு வருகை புரிந்த ரெபாக்கா டிஷேனே, நாளிதழ்களில் முன்பக்கத்தில் ஹிலரி கிளிண்டனின் புகைப்படம் இல்லாதது இன்னமும் ஆண்களை மையப்படுத்தியே அமெரிக்க ஊடகங்கள் இயங்குவதை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

”இதுகுறித்து சிலர் வாதிடுவர். பில் கிளிண்டன் மாநாட்டில் உரையாற்றினார் என்பது உண்மை தான். ஆனால், இப்போதைய தருணம் ஹிலரியுடையதாக இருந்திருக்க வேண்டும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் நாம் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது” என்று ரெபாக்கா தெரிவித்தார்.

தனது சொந்த மாநிலத்திலிருந்து வெளிவரும் செய்தித்தாளின் முன்பு சற்றே அமைதி காத்த ரெபாக்கா, ”இந்தியானா போலிஸ் ஸ்டார் செய்தித்தாள் குறித்து நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

பெரிய புன்னகையுடன் கூடிய ஹிலரி கிளிண்டனின் காப்பக புகைப்படத்துடன் வெளிவந்த இந்தியானாபோலிஸ் ஸ்டார் செய்தித்தாளின் தலைப்பு செய்தியில், ”வரலாறு நிகழ்த்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நாளிதழின் முன்பக்கத்தில் ஹிலரியின் கணவர் படம் அறவே இல்லை.