அவசரமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம்

ரொரன்ரோவில் இருந்து கல்கரி நோக்கி பயணித்த எயர் கனடா விமானம் திசை திருப்பப்பட்டு லெத்பிரிட்ஜ்(Lethbridge) விமான நிலையத்தில் அவரச தரையிறக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எயர் கனடாவின் AC1159 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், அந்த விமானத்தின் கண்ணாடியில் வெடிப்பு உருவானதால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விமானம் தரையிறக்கப்படுவது தொடர்பில் அப்போது பயணிகளுக்கு தெரியப்படுத்திய போது, புயல்காற்று காரணமாக விமானம் திசை திருப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டதுடன், பின்னர் விமானம் தரையிறங்கியதை தொடர்ந்து பயணிகள் விமானத்தை விட்டு வெளியே வந்த பின்னரே கண்ணாடியில் ஏற்பட்ட சேதம் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்ட செய்தி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விமானத்தில் அப்போது 144பயணிகள் இருந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த அசம்பாவிதத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என விமான நிலையத்தில் அவசரகால பணிக்காக தயார்ப்படுத்தப்பட்ட தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.