அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறி இந்தியர் மீது சரமாரி தாக்குதல்

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஒமாஹா என்ற நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலைபார்த்து வருபவர் இந்தியரான சுதாகர் சுப்புராஜ் (வயது 30). இவர் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் சுப்புராஜ் தலையில் பலமாக அடித்தார்.

அதன் பின்னர் அந்த நபர் தனது கைகளால் சுப்புராஜின் முகம் மற்றும் வாயில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதற்கு பின்னரும் அந்த நபர் சுப்புராஜை கால்களால் உதைத்தார்.

அந்த நபர் சுப்புராஜை தாக்கும் போது “ஐ.எஸ்., ஐ.எஸ். எங்கள் நாட்டை விட்டு வெளியே போ” என்று உரக்க கத்தினார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டார்.

அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளனர். இந்து அமெரிக்க கூட்டமைப்பு, இது மதரீதியான தாக்குதல் என்று கூறி கடுமையாக கண்டித்து உள்ளது.

உள்ளூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

saa