கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது – 2016

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது திரு கி.ராஜநாராயணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ‘கரும்பாலைவனம்’ என்று சொல்லப்படும் கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை இலக்கியமாக்கிய முதல் எழுத்தாளர் இவர் என்று சொல்லலாம். இவரை வட்டார மொழி இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’ என்றும் அழைப்பார்கள்.

கி.ரா.வின் சொந்த ஊர் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல் கிராமம். பெற்றோர் கிருஷ்ண ராமானுஜன், இலட்சுமி அம்மாள்.

இவர் 40 வயதிற்குப் பிறகு எழுத ஆரம்பித்து சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார்.

1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் சிறுகதை வெளியானது. அன்றிலிருந்து இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப் பாடுகளையும் விவரிப்பவையாக அமைந்துள்ளன.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி; தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் இவர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

இவர் பத்துச் சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு குறுநாவல்களும், மூன்று முழு நாவல்களும், ஆறு கட்டுரை தொகுதிகளும் எழுதி வெளியிட்டிருக்கிறார். ’கிடை’ என்ற இவருடைய சிறுகதை ’ஒருத்தி’ என்ற தலைப்பில் அம்ஷன் குமார் அவர்களால் திரைப்படமாக எடுக்கப்பட்டு மிகுந்த பாராட்டைப் பெற்றது.

இவர் இன்றைக்கும் சளைக்காமல் எழுதுகிறார். ‘ஒரே நேரத்தில் கதையை எழுதி முடிச்சுடும் வழக்கம் என்னிடம் இல்லை. அடிச்சு அடிச்சு திருத்தி திருத்தி எழுதுற ஆள் நான். அதனால் எழுத்தும் வாசிப்பும் மாத்தி மாத்தி நடந்துகிட்டே இருக்கும்’ என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதை கடந்துவிட்ட கி.ரா. தற்போது புதுச்சேரியில் தன் மனைவி கணபதி அம்மாளுடன் வசித்துவருகிறார்.

இவருக்குத் தமிழ் இலக்கியச் சாதனை 2016 விருதுக் கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தினரால் வழங்கப்படுகிறது. விருது விழா சென்னை, கவிக்கோ மன்றத்தில் 27 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெறும். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பாக இந்த விருதை சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் எம்.ஏ. முஸ்தஃபா அவர்கள் வழங்குவார்கள்.

ki.raa