1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் உயர்திரு பொன்.ஐயாத்துரை சிவசாமி (இளைப்பாறிய அதிபர்)

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி மற்றும் கனடாவை(Ottawa) வசிப்பிடமாகவும் கொண்ட பொன்.ஐயாத்துரை சிவசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கற்பனையில் கூட நாம் எண்ணவில்லை – சட்டென
கணப்பொழுதில் எம்மை விட்டுப் போய்விட்டீர்கள்
இற்றைவரை மனம் நம்ப முடியவில்லை
இன்றுடன் ஓராண்டு கடந்ததென்று
கற்றவரும் உற்றவரும் மதிக்க வாழ்ந்தீர் – என்றும்
காலத்தே அழியாத கல்வி தந்தீர்
நற்றவனின் பாதமதை நலமே பற்ற
நானிலத்தில் நம்மைவிட்டு மறைந்தே போனீர்?

குன்றத்தின் ஒளி விளக்காய் – எம்
குடும்பத்தின் தலைமகனாய்
மன்றத்து நாயகனாய் – மதிக்கும்
மாசற்ற ஆசானாய்
பண்புடனே வாழ்ந்தவரே – எல்லோர்
பாசத்தில் உயர்ந்தவரே
என்றும் எம் இதயமதில்
எப்போதும் வீற்றிருப்பீர்…!!!
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

மண்ணை நேசித்த மாமனிதன் ….
…..தமிழேந்திய சுடர்
அமரர் ஐயாத்துரை சிவசாமி அவர்கள் ஆக்கிய புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவெனும் தாயவளே! உனைப்
போற்றி நாம் வணங்குகிறோம்
எங்களை ஈன்ற இனியவளே – உனை
என்றுமே நாம் மறவோம்
மங்கலமோங்கி மகிழ்ச்சி ததும்பி
மறுபடி நாம் வாழ்வோம்!
சங்கப் புலவர்கள் போற்றிய சிறப்புகள்
சகலதும் – நாம் பெறுவோம்!

தாயே நீ வாழீ! தமிழே நீ வாழீ!
எம் – உயிரே நீ வாழீ! உயர்வாய் நீ வாழி!

ஆதவன் முன்பனி போல உன் துயரம்
அம்மா மறைந்து விடும்
வேதனை கொண்ட எங்களின் வாழ்வில்
விரைவினில் விடியல் வரும்
பாதைகள் இங்கே சமைப்போம்! – மீண்டும்
பாரினில் மனிதராய் நடப்போம்
ஓசைகள் கொண்டே ஒலிப்போம் – உந்தன்
புகழே உயர உழைப்போம்…

தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

கோயில் தேவாலயம் விழாக்களை காணும்
குளங்களும் வயல்களும் நிரம்பும் – புலம்
மேவிய மக்களும் கூட்டமும் சேரும்
மேன்மைகள் கை வந்துகூடும்
நோயினில் வாடிய வாழ்வது நீங்கி
நிம்மதிக் காற்றிங்கு வீசும் – தாயவள்
நெற்றியின் குங்குமம் என்றுனைத் – தினமும்
பெருமையாய் உலகம் பேசும்!

தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் – உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

உன்மண்ணிலே தவழ்ந்து வளர்த்தவர் – நாங்கள்
மறந்திடுவோமோ உன்னை
உன்னில் எழுதிய – ‘அ’னா வரிகளால்
உயர்வடைந்தவர்கள் நாங்கள் – தாயே!
பனைமர வலிமை பெற்றோம்! உன்
நினைவுடன்நிமிர்ந்திடக் கற்றோம்! – வரும்
தடைகளை நாங்கள் கடப்போம் – எம்
தாய்க்காய் என்றும் இருப்போம்…!

தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் – உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

தகவல்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் புங்குடுதீவு மக்கள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு