2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சசிதரன் செல்வநாயகம் (இலங்கை மின்சாரசபை, Bahrain மின்சாரசபை, Toronto Hydro ஆகியவற்றில் கடமை புரிந்தவர்)

திதி : 25 டிசெம்பர் 2012
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, கல்முனை, Bahrain முதலிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சசிதரன் செல்வநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும், பண்பும் ஆற்றல்கள் பலவும்
அள்ளிக் கொடுக்கும் அழகான மனமும்
துன்பம் துடைக்கத் துணைபோகும் தோழமையும்
தூங்காமற் பகலிரவாய்த் தொண்டுசெய்யும் துடிப்பும்…

கன்னம் சிரிக்கக் கதைகதையாய்ச் சொல்லிக்
கலகலப்பில் அனைவரையும் கவர்ந்திழுக்குங் கலையும்
’என்னால் முடியும்’ என்கின்ற மனத்திடத்தால்
எத்தனையோ சாதனைகள் ஏற்றிவைத்த வல்லமையும்…

ஆசை மனைவிமக்கள் உற்றார் உறவினர் நண்பரென
அனைவர்க்கும் கடமைகளை ஆற்றிய வீரமும்
பாசத்தில் அன்னையாய் பணிவிடையிற் தாதியாய்
பண்புடன் குடும்பத்தைப் பராமரித்த அழகும்…

செய்நன்றி மறந்துபலர் செருக்குடன் வாழ்கையிலே
சித்தங்குளிரத் தினம் சேவைசெய்த திடமும்
பெய்யும் மழையினிலே பித்தனாய் நனைந்து
பேரானந்தமுடன் பிள்ளையாய்ச் சிரித்ததுவும்…

எதனையும் இலகுவாய் எண்ணியே முடித்து
எவரையும் வெறுக்காமல் ஏத்திட்ட மனமும்
உதவிகேட்டு வந்தோர்க்கு உலகமாய் நின்று
உயிரையுங் கொடுத்திட்ட உயரிய பாங்கும்…

எண்ணில் அடங்காத நற்குணங்க்ள் அத்தனைக்கும்
ஏகநாயகனாய் இன்புற்று வாழ்ந்த உனைக்
கண்ணிமைக்கும் நேரத்திற் கவர்ந்துசென்ற காலனின்
கருணையற்ற செயலில் கலங்குதே எமது உள்ளம்…!

ஆண்டுகள் இரண்டென்ன ஆயிரம் ஆனாலும்
அன்பினில் இணைந்தநெஞ்சம் அணுவளவும் மாறாதே!
வேண்டும் வரமெல்லாம் ஒன்றே! உங்கள்
ஆத்மா சாந்திபெற ஆண்டவன் அருள்புரியட்டும்…!!!

உங்களின் ஆத்மசாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்து நீங்காத உங்கள் நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், மருமகன், பேரன், உற்றார், உறவினர், நண்பர்கள்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு