90வது நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அமரர் சதுஜா சுந்தரலிங்கம்

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சதுஜா சுந்தரலிங்கம் அவர்களின் 90வது நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார் சுந்தரலிங்கம்(பருத்தித்துறை மாதனை) மங்கையற்கரசி(மங்கை- சாவகச்சேரி மட்டுவில்) தம்பதிகளின் ஏக புதல்வியும் ஆவார்.
அன்பாய் அரவணைத்து ஆசையாய் அமுதூட்டி
அல்லும் பகலும் அருகிருந்து
கண்ணும் கருத்துமாய் வளர்த்தெடுத்த நாட்களும்
மழலை மொழிபேசி முத்த மழை பொழிந்து
உன் பிஞ்சுக் கால்களால் மார்புதனில் நீ உதைத்த
இன்ப வலி மறப்போமா?
சின்னக் காலெடுத்து சிங்கார உடையணிந்து
பள்ளி சென்ற பக்குவமும்
நீ கற்ற கலைகளிலெல்லாம் உனக்கென்றோர்
நீ பதித்த முத்திரையும்
நீ வரைந்த கோலங்கள் மற்றவர்க்கோர் மாதிரியாய்
பகிர்ந்தளித்த சேதிதனை மறப்போமா?
செல்லுமிடமொங்கும் நிழலாய் பின்தொடர்ந்து
அழகுதமிழில் ஆயிரம் கதைபேசி
அதிலும் பல ஆராய்ந்து
நிஜம் தேடும் உன் நுண்ணறிவை
ஆசானும் கற்றவரும் மற்றவரும்
உனை போற்றி புகழ்தல் கண்டு
ஆயகலைகள் யாவும் கற்று
இம் மண்ணை ஆழ்வாயென்று
பல நூறு கனவு கண்டோம்
கற்பனையில் நாம் மிதந்தோம்
ஏல்லாம் கருகியதே!
கானல் நீர் ஆனதுவே!
காலன் அழைத்தான் என்று விண்ணாளச் சென்றாயோ!
பாதியிலே எம்மை பரிதவிக்கவிட்டு
அங்கம் எல்லாம் நடுங்க ஆசையிலே துடிக்கின்றோம்
ஒரு கணம் உன் திருமுகம் காட்டாயோ?
எம் ஈர விழிகளை ஒருமுறை வந்து துடைக்காயோ?
உன் பட்டுக் கரங்களினால்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன் பிரிவால் ஏங்கும் அம்மா, அப்பா, நண்பர்கள் மற்றும் உறவினர்கள்.
எமது அன்புச் செல்வியின் அகாலச் செய்திகேட்டு ஓடோடி வந்து எமக்கு ஆறுதலாய் அருகிருந்து எமது துன்பத்தில் பங்குகொண்டவர்க்கும், இறுதிக்கிரிகையில் உதவியவர்க்கும், மலர்வளையம், மலர்மாலைகளிட்டு கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டு, மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக அனுதாபம் தெரிவித்தவர்கட்கும், கிரிகையில் கலந்து அஞ்சலி செலுத்திய பல நூறு அன்பு உள்ளங்கட்கும் மற்றும் இன்றுவரை எம்மோடிருந்து ஆறுதலளித்து எல்லாவகையிலும் உதவிய அயலவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாவர்க்கும் எமது குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
செல்வியின் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், வீட்டுகிருத்தியமும் 16-01-2014 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
வீட்டுமுகவரி:
Uetlibergstrasse 82,
8045 Zürich,
Switzerland.
தகவல்
குடும்பத்தினர்