ஜனாதிபதி அரசியலமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கிறார்- வேலுக்குமார்
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த உத்தியோகப்பூர்வமாக எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதன் மூலம், அரசியலமைப்பை தனக்கு சாதகமான முறையில் ஜனாதிபதி பயன்படுத்த முயல்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுக்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சுயாதீன ஆணைக்குழுக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச அதிகாரிகள் என அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, முழு அரசியல் அமைப்பையும் ஜனநாயகத்துக்கு எதிராக ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்கின்றார்.
ஜனாதிபதி ரணில் பிரதமராக இருந்த வேளையில், தேர்தல் முறையில் மாற்றம் தேவை எனத் தெரிவித்து மாகாண சபை முறைமையையே இல்லாதொழிக்க திட்டம் தீட்டினார். தற்போதும், அதுபோன்ற ஒரு முறைமையை முன்னெடுத்து தேர்தலை நடாத்தாமல் இருக்க முயற்சிக்கின்றார்.
மாகாணசபைகள் இல்லை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இல்லை இந்த பாராளுமன்றம் ஜனாதிபதியின் கையிலே ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு அவர் பின்னால் இருக்கும் மக்களால் தெரிவான அதிகாரிகள் கைத்தட்டி ஆதரவளித்து ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்க உதவுகின்றனர் என வேலுக்குமார் குறிப்பிட்டார்.
அத்துடன், மின் கட்டண அதிகரிப்பானது முதலில் மலையக மக்களையே பாதித்துள்ளதாகவும், இதனால் அவர்கள் நிரந்தரமாக இருளிலே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முழு நாடே மின்கட்டணம் செலுத்த அல்லலுறும் இந்த வேளையில் மலையக மக்கள் எவ்வாறு அதனை செலுத்துவார்கள் என அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், நடப்பு அரசாங்கத்துடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் இதுபற்றி ஒரு போதும் பேசப்போவதில்லை எனவும், அவர்களுக்கு மக்களின் வலிகள் புரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.












கருத்துக்களேதுமில்லை