மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் – பெண் சுயதொழில் முயற்சியாளர்கள்

மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் என பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

நாங்கள் பல்வேறு சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். அதிலும் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நான் பெண் தலைமைத்துவக் குடும்பத்தை சேர்ந்தவர். தையல் தொழில் மூலம் எனக்கு மாதாந்த வருமானம் 5 ஆயிரம் ரூபா. ஆனால் கிடைத்த மின்கட்டணம் 3 ஆயிரத்து 550 ரூபா.

இந்த நிலையில் நான் பொருளாதாரத்தைக் கொண்டு செல்வதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது. எனது பிள்ளையின் பாடசாலை பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாவிற்கு மேல் தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் எமது வருமானம் அதற்குப் போதாது உள்ளது.

இந்த நிலையில், மின்கட்டண அதிகரிப்பும் பாரிய சவாலை ஏற்படுத்துகின்றது. எனது பிள்ளைகளைக் கற்பிக்க முடியாத நிலைக்கு இந்தப் பொருளாதாரமும் வரியும் தாக்கம் செலுத்துகின்றன. எம்மைப் போன்ற சுயதொழில் முயற்சியாளர்களுக்கு மின்கட்டண கழிவை அரசாங்கம் அறிமுகம் செய்ய வேண்டும்.

பொருளாதார சந்தையில் போட்டியின் மத்தியில் எமது உற்பத்திகளை நாங்கள் கொண்டு செல்கின்றோம். தற்பொழுது மின்சாரம் உள்ளிட்ட அதிகரிப்பு காரணமாக சந்தைப்படுத்த முடியவில்லை. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் எமது உற்பத்திகள் சந்தைப்படுத்தப்படுவதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மக்கள் அன்றாட செலவுகளைப் பூர்த்தி செய்ய முடியாது தவிக்கின்றார்கள். 150 ரூபா விற்கப்பட்ட கொப்பி இன்று 500 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இவ்வாறு விலைவாசி அதிகரித்துள்ளமையால் மக்கள் சில உற்பத்திகளை குறிப்பாக ஆடம்பர உற்பத்திப் பொருள்களை கொள்வனவு செய்வதில்லை. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.