வர்த்தமானி அறிவித்தல்களால் தடுக்க முடியாது : திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் இடம்பெறும் – தொழிற்சங்கங்கள் உறுதி

திட்டமிட்ட படி நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சகல துறைகளும் முடங்கும் வகையில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி சட்ட மூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி முதல் ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறிருப்பினும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு 3 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கத்தினால் உரிய தீர்வு வழங்கப்படாமையின் காரணமாகவே நாளை சகல தொழிற்சங்கங்களும் இணைந்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை மாலை நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்றது.

எவ்வாறிருப்பினும் இப்பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாமையின் காரணமாக நேற்றும் 5 மாகாணங்களில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

அகில இலங்கை தாதியர் சங்கம் , பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு , பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் , மின்சார பொறியியலாளர்கள் சங்கம் , இலங்கை மின்சாரசபை ஊழியர் சங்கம் , இலங்கை மின்சார ஊழியர் சேவை சங்கம் , அரச அச்சக ஊழியர் சங்கம் , தபால் சேவை சங்கம் , அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் , துறைமுக ஊழியர் சங்கம் , நீர் வழங்கல் , பெற்றோலிய தொழிற்சங்கங்கள் , வங்கி ஊழியர் சங்கங்கள் , புகையிரத தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

நேற்று(13) தபால் சேவைகளை அத்தியாவசிய சேவைகளைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

எவ்வாறிருப்பினும் எவ்வாறான தடைகள் விதிக்கப்படினும் தம்மால் திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.