ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை – அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கம்

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை. நிதி வழங்கும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கிடையாது, வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நோக்கம் அரச அச்சகத் திணைக்கள தலைவருக்கும் கிடையாது என அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் அசங்க சதருவ தெரிவித்தார்.

வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா,இல்லையா என்ற சந்தேகம் காணப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இதுபோல் எந்த தேர்தலுக்கும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அரச அச்சகத் திணைக்கள தலைவரும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய செயற்படுகிறார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால் மூல வாக்கெடுப்புக்கு மாத்திரம் ஆறு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டும், ஆனால் தற்போது 70 சதவீதமான வாக்குச்சீட்டுக்கள் தான் அச்சிடப்பட்டுள்ளன.

ஆகவே தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் முழுமையாக அச்சிடப்படவில்லை.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது,ஆனால் அதற்காக ஒரு வாக்குச்சீட்டுக்கள் கூட இதுவரை அச்சிடப்படவில்லை.

வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை உரிய அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது,

நிதி கிடைக்கப்பெற்றாலும் வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான பணிகளை மேற்கொள்ளும் நோக்கம் அரச அச்சகத் திணைக்கள தலைவருக்குக் கிடையாது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.