கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுவது மக்களின் இறையாண்மைக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆலோசனை

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுகின்ற அதிகாரம், மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டும் அதிகாரத்தை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரமே அதிகாரம் வழங்கப்படுவதாகவும்,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட பதவிகளின் கால அளவை தாண்டி அந்தந்த பதவிகளில் செயற்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டியவர் அமைச்சர் அல்லர், மக்களே ஆவர். அதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டியது மக்களே ஆவர்  என அவர் இதன்போது தெரிவித்தார்.

இது நாட்டின் ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும்  கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை, சட்டமூலமாக  வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துகளை திருத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த சரத்துகள்  திருத்தப்பட்டால் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை  விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிர்ணயிக்கும் கால எல்லை வரை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான வாய்ப்பு  கிடைக்கும் எனத்  தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.