மைத்திரி நஷ்டஈடு வழங்கும் விவகாரம் நீதிமன்றமே இறுதி முடிவை எடுக்குமாம் அருட் தந்தை சிறில் காமினி கூறுகிறார்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகையை முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன செலுத்துவது குறித்த தீர்மானத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும்.
இவ்விடயம் தொடர்பாக எந்தக் கருத்தையும் எங்களால் கூற முடியாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி அடிகளார் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகையை வழங்குவதற்கான 6 மாத கால அவகாசம் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால கடந்த ஜூன் 28 ஆம் திகதியன்று 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், எஞ்சிய இழப்பீட்டுத் தொகையை 2024 ஜூலை முதல் முதல் 2033 ஜுன் வரையான 10 ஆண்டு காலப் பகுதியில் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரிடம் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் –
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ள மனுவில் எஞ்சிய இழப்பீட்டுத் தொகையை செலுத்தவதற்கு கால அவகாசத்தை கேட்டுக்கொண்டுள்ளார் என ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
உயர் நீதிமன்றத்திற்கு மனுவொன்று சமர்ப்பித்துள்ளதால், இது குறித்த கருத்துக்களை எங்களால் கூற முடியாது. உயர் நீதிமன்றமே இது குறித்து தீர்ப்பை வழங்க முடியும். – என்றார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்புக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார் எனவும், எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையான 85 மில்லியன் ரூபாவை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை 10 ஆண்டுகாலத்திற்கு தவணை வாரியாக செலுத்துவதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












கருத்துக்களேதுமில்லை