இலவச மருத்துவசேவை அச்சுறுத்தலில்:   வைத்தியசாலைகளுக்குச் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை!  மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டு

இலவச மருத்துவ சேவை பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது.

எதிர்வரும் நாள்களில் சுகாதாரத்துறை அமைச்சர் நல்லவர் என மலர்சாலை உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிடுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

தேசிய கடன் மறுசீரமைப்பைத் தொடர்ந்து வங்கி வணிக கடன்களின் வட்டி வீதம் குறைவடையும் என அரசாங்கம் குறிப்பிட்டது.ஆனால் இதுவரை எந்த வட்டியும் குறைவடையவில்லை.நாட்டு மக்களுக்கு பொய்யுரைத்து இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்றுள்ளார். எதை விற்பார் என்பதை அறியவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னரே அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

ஆகவே, ஜனாதிபதி நாட்டுக்கு வந்ததன் பின்னரே இந்தியாவுக்கு எது விற்கப்பட்டது என்பதை அறிய முடியும். ஜனநாயகத்தையும், நாடாளுமன்றத்தையும் புறக்கணித்து செயற்பட நினைத்தால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. நாட்டுக்கு புதிதாக ஒரு முதலீடும் வருகை தரவில்லை. கடன் பெறுவது, இருக்கும் வளங்களை விற்பது இதுவே ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையாகக் காணப்படுகிறது.

தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். எந்த திட்டங்களையும் ஆரம்பிக்காமல் கடன்பெறும் திட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது.

டெலிகொம் நிறுவனத்தின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பல பங்குகளை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வட்டமேசை கூட்ட சூழ்ச்சியுடன் அவர் பதவி நீக்கப்பட்டார்.

அரசாங்கத்துக்கு சார்பான ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்.இவ்வாறான நிலையில் தான் அரசாங்கம் செயற்படுகிறது.

சுகாதாரத்துறை பல நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.தரமற்ற மருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எதிர்வரும் நான்களில் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நல்லவர் என மலர்சாலை உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிடுவார்கள்.அரச கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒருபோதும் முன்னேற்ற முடியாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.