வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதி ஜனாதிபதியிடம் வழங்கி வைப்பு!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 7 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 4 பில்லியன் ரூபாய்க்கான காசோலை நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு, அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி 07 பில்லியன் ரூபாயில் 3 பில்லியன் ரூபாய் ஏற்கனவே ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதோடு, அதற்கு இணையாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 3382 மில்லியன்களை வழங்கியிருந்தாலும் ஒரே வருடத்தில் 7 பில்லியன் ரூபாயை வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர். பி. ஏ. விமலவீர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












கருத்துக்களேதுமில்லை