கிண்ணியாவில் கனி தராத மாமரம் ஒன்றில் 12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்ட வைத்து பயன்பெற்று வரும் முதியவர்…

கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை எனும் விவசாய கிராமத்தில் தனியாக வாழ்ந்து வரும் அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் (வயது – 75) என்பவர் தன்னுடைய வீட்டில் பல வகையான பழமரங்களை பயிரிட்டு பலன் பெற்று வருகின்றார்.அவரது தோட்டத்தில் சுமார் 25 க்கும் மேற்பட்ட பழ மரங்கள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

இவரது முன்னைய தொழிலானது மேசன் தொழிலாகும். ஆனாலும் அவர் மரநடுகையில் அதீத ஈடுபாடு காட்டுபவராக உள்ளார்.இவரது தோட்டத்தில் அரிதான பல மரங்கள் காணப்பட்டாலும் ஒரே மரத்தில் ஒரு தோட்டமே காணப்படுகிறது எனப் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஓர் அற்புதத்தைச் செய்துள்ளார்.

கனி தராத மாமரம் ஒன்றில்  12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்ட வைத்தே அவர் இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.

சிவப்பு இன மாங்காய் காய்க்கக்கூடிய தாய் மா மரத்தில் ஒட்டப்பட்ட கறுத்த கொழும்பான், வெள்ளை கொழும்பான், விளாட், டொமி எனப்படும் மலேசியா இன மாமரம், திராட்சை போல் காய்க்கக் கூடிய கூடிய திராட்சை மாம்பழம் எனப் பல இனங்களைச் சேர்ந்த 12 ரக மாங்காய்கள் காய்க்கின்றன.அதேவேளை, அதில் மேலும் இரண்டு இன மாமரங்கள் ஒட்டப்பட்டுள்ளன எனவும், ஒட்டப்பட்ட கிளைகள் பெறப்பட்ட மாமரம் எப்போது காய்க்கின்றதோ அப்போதுதான் அந்தக் கிளைகளும் காய்க்கின்றன என ஜலால்தீன் தெரிவித்தார்

வயது முதிர்ந்த காலத்தில் கூட அவர் தனது விவசாய ஆர்வத்தை வெளிப்படுத்தி இருப்பது பலரதும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.