பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு!
ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மிருசுவில் கொலை வழக்கு குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு எதிராகத் தொடரப்பட்ட நான்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்குகளை எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்கும் ஜனாதிபதியின் முடிவிற்கு எதிராக நான்கு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த வழக்குகள் ஒரே நேரத்தில் நீதியரசர்கள் எல்.எச். தெஹிதெனிய, யசந்தகோதாகொட முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
படுகொலைக்கு உள்ளானவர்கள் சார்பில் இரண்டு வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், ஜெப்ரி அழகரட்ணம் ஆகியோர் முன்னிலையானார்கள்.
அத்துடன், இரண்டு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாற்றுக் கொள்கைகளிற்கான நிலையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
இதனைவிட, அம்பிகா சற்குணநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் முன்னிலையாகினார்.
இவ்வாறு, நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும், ஒரு வழக்கு தொடர்பான ஆவணமே சுனில் ரத்னாயக்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன், நீதியமைச்சின் செயலாளர் மாற்றமடைந்துள்ளமையால் புதிய செயலாளரின் பெயர் வழக்கில் புதிதாக மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தது. இதனால், குறித்த வழக்குகளை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.












கருத்துக்களேதுமில்லை