குழந்தைகள் விற்பனை மோசடி செய்த நபர் கைது..

கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உற்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குழந்தைகள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த மோசடியில் ஈடுபட்ட 47 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (21) மாத்தளை, உக்குவெல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இணையத்தின் ஊடாக விளம்பர காணொளி ஒன்றை தயாரித்து குறித்த நபர்கள் இந்த மோசடியை மொரட்டுவ பகுதியில் இரண்டு இடங்களில் நடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை சந்தேக நபர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து, ஒப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு குழந்தைகள் பிறந்தவுடன் குறித்த குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இந்த மோசடியை ´பேபி பார்ம்´ என குறிப்பிடுவதாகவும் இதனுடன் தொடர்புடைய 12 கர்ப்பிணி பெண்களை பொலிஸார் இனங்கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுள் 5 பேரின் குழந்தைகள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று குழந்தைகளுடன் தாயார் இருப்பதாகவும் மேலும் 12 கர்ப்பிணி பெண்கள் சந்தேக நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் சுமார் 30 குழந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.