தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்கள் எம்.பிக்களுக்கும் அனுப்பி வைப்பு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியல் மற்றும் விவரங்களை அனைத்து பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடக்கப் புள்ளியாக அமையும். அதேநேரம், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.  அப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

“11 வருடங்கள் முதல் 26 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறையிலுள்ள 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்கள், தண்டணை விவரங்கள், வழக்கு விவரங்கள் போன்ற சகல விவரங்களையும்   உள்ளடக்கிய கோவை , 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம் .

“விரைவாக அவர்களின் விடுதலை செய்தியை  எதிர்பார்த்து இருக்கிறோம். அந்த வகையில், அவர்களுடைய பெற்றோரும் எதிர்பார்ப்புடன் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“அத்துடன், அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை நாம் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம், சுமந்திரன் அவர்களுடைய கொலை முயற்சி காரணமாக கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும்  நாம் சேகரித்து வருகிறோம்.  அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் போல எம்.ஏ. சுமந்திரனும் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.