சில கழகங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை தவிர்க்கப்பட்டு பொது மைதானத்தை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்- ஏ.எல்.எம்.சலீம்

பொலிவேரியன் மைதானம் அனைவருக்கும் பொதுவானது; பேதங்கள் மறந்து அனைத்து கழகங்களும் மைதான அபிவிருத்தியில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நான் பிரதேச செயலாளராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டதே சாய்ந்தமருது போலிவேரியன் அஷ்ரஃப்  ஐக்கிய விளையாட்டு அரங்கு ஆகும்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமம் பொலிவெரியன். இங்கு கரைவாகு கிழல் கண்டத்தில் சுமார் 200 ஏக்கர் காணிகள் அளவீடு செய்யப்பட்டு 50 ஏக்கருக்கும் குறைவான காணிகள் மட்டுமே அரசினால் நஷ்டஈடு வழங்கப்பட்டு சுவீகரிக்கபட்டது. அக்காணிகளுக்கான வரைபடம் பிரதேச செயலகத்தில் உள்ளது என சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும், பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகள் சம்பந்தமான   விபரங்கள் காணி பயன்பாடு திட்டமிடல் உத்தியோகத்தரால் தயாரிக்கப்பட்ட வரைபடம் பிரதேச செயலக காணி பிரிவில் இருக்கின்றது. அத்துடன் மைதானம் அமைந்துள்ள பிரதேசத்தில் சுமார்  15 ஏக்கர் காணி மொகிதீன் கீத்து வீதிக்கு வடக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 10 ஏக்கர் மேற்படி மைதானத்திற்கு ஒதுக்கப்பட்டது.  மைதானத்தின் மேற்கு தவிர்ந்த ஏனைய  மூன்று எல்லைகளும் வீதிகளாக காணப்படுகின்றது.  மிகுதியில்  4 ஏக்கர் காணி   வீடற்ற  குடும்பங்களுக்கு வீட்டுத் தொகுதி அமைப்பதற்காக   தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும் மற்றும் மிகுதி ஒரு ஏக்கர் காணி விதை நெல் உற்பத்தி நிலையத்திற்கும், நெல் களஞ்சிய சாலைக்கும் ஒதுக்கப்பட்டது.

இந்த மைதானம் கருவாகி, உருவாகி  2008ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டது. முதலில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சமூர்த்தி சங்கங்களின் உதவியுடன் சுமார் 1000 கியூப் கடற்கரை மண்  இடப்பட்டது. பின்னராக மாநகர சபை குப்பைகள் நிரப்பி மற்றும் சில அரசியல் வாதிகளின் ஒதுக்கீடுகள் மூலமும் அபிவிருத்தி செய்யப்பட்டது.  குறிப்பாக பொலிவேரியன் வீடமைப்பு நிதியத்தின் உதவியுடன் முதற் கட்டமாக மைதானத்தை சிறிய அரங்குடன் நிறைவு செய்து வீரர்களின் பாவனைக்கு வழங்கினோம்.  சுமார் 5 மில்லியன் ரூபாய் செலவில் பெரிய அரங்கு 2016ஆம் ஆண்டில் அமைத்தோம்.  இவ்வாறு இம் மைதானம் என்பது ஒரு சிலர்  நினைப்பது போலல்லாது மிகவும் திட்டமிட்டு படிப்படியாக  அபிவிருத்தி  செய்யப்பட்டதாகும்.

அண்மையில் கூட  அமைச்சின் மூலமாக 5மில்லியன் ரூபாய்கள் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க 3 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எனவே அதனைக் கொண்டு முன்பக்க  சுவர்களை அமைப்பதுடன்  மைதானம் செப்பனிடப்பட்டு  பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபுறம் காணிகள் எல்லையிடப்பட் டு காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமான விடயம். ஆனால் மறுபுத்தில் இது சம்பந்தமாக பிழையாக மக்களை வழி நடாத்தி பிரதேச செயலகத்திற்கு களங்கம் ஏற்படுத்த முனையும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் முன்னாள் பிரதேச செயலாளர் மற்றும் இவ்விளையாட்டு மைதானத்தை உருவாக்கியவர்கள் என்ற ரீதியில் இவ்விளையாட்டு மைதானம் சரியான முறையில் அபிவிருத்தி செய்து முடியும் வரைக்கும் பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

அத்துடன் கழகங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டும். மாறாக ஒருசில கழகங்கள் மட்டும் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும்.  இம்மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஊரில் உள்ள  விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர் அமைப்புக்கள், நலன்விரும்பிகளைக்கொண்ட செயலணியொன்று உருவாக்கப்பட்டு, சரியான முறையில் அபிவிருத்தி செய்வதற்கு  பேதங்களை மறந்து அனைத்து கழகங்களும் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.