பிரதமரின் புதிய செயலாளர் அனுர திசாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்கள் இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் பிரதமரின் புதிய செயலாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது மஹாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்களை ஆசீர்வதித்தனர்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான திரு.அனுர திசாநாயக்க அவர்கள் இதற்கு முன்னர் நீர்ப்பாசனம், உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், கல்வி உட்பட பல அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ள அனுர திசாநாயக்க அவர்கள் அனுபவமிக்க அரச அதிகாரியாவார்.

பிரதமரின் புதிய செயலாளரின் பதவியேற்பு விழாவில் கங்காராம விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் சிறு உரையொன்றை நிகழ்த்தினார்.

‘நாட்டின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால பயணத்திற்கான பணிகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எமது இனிய நண்பர் காமினி சேதர செனரத் மற்றும் பிரதமரின் செயலாளராக பதவியேற்றுள்ள அனுர திசாநாயக்க அவர்களுக்கும் இந்தப் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஜனாதிபதியின் இந்த இரண்டு புதிய நியமனங்களும் அடுத்த மூன்று வருடங்களில் எமது நாட்டின் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானமாக நான் கருதுகின்றேன்.

மலையக மாத்தளை பிரதேசத்தில் பிறந்த நீங்கள் புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்று எமது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றீர்கள். அதன் பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து  உதவி பிரதேச செயலாளராக மாத்தளையிலிருந்து மேற்கொண்ட பயணத்தை இன்று திரும்பிப் பார்க்கையில், பெருமை கொள்ள வேண்டிய ஒரு பயணம் உங்களுக்கு உள்ளது’ என வண.கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர்; நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ரஜர பல்கலைக்கழகத்தின் வேந்தர் மிரிசவெட்டிய சைத்தியராமாதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினரும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

மேலும் அமைச்சரவை செயலாளர் டொனல்ட் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதமரின் மேலதிக செயலாளர்களான ஹர்ஷ விஜேவர்தன, சட்டத்தரணி சமிந்த குலரத்ன, அன்டன் பெரேரா, நிசாந்த வீரசிங்க உள்ளிட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.