தேசிய புலனாய்வு பிரிவிற்கு வவுனியாவில் காணி வழங்குமாறு ஆளுநர் பரிந்துரை! மாவட்ட ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு!

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு காணி வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் பரிந்துரைத்துள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு வியாழக்கிழமை எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம், தெங்கு அபிவிருத்தி அதிகார சபை, பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம் மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம், ஊடகவியலாளர் சங்கம் ஆகியன தமக்கு நகரப் பகுதியில் காணி ஒதுக்கித் தருமாறு வவுனியா பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்கா வீதிப் பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதன்போது, பூங்கா வீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, காணியை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இதன்போது, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கு.திலீபன் கருத்து தெரிவிக்கையில், பூங்கா வீதியில் அமைந்துள்ள இடம் தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குவதற்கு ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாங்கள் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அதை நிராகரித்தோம். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் நிராகரிக்கின்றோம். தேசிய புலனாய்வு திணைக்களத்திற்கு கொடுப்பதற்கு உடன்பாடில்லை. அதனை அரச திணைக்களங்களுக்கு அல்லது மாவட்ட மட்ட சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என முடிவெடுக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிhர்மலநாதன் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் பல திணைக்களங்கள், பல சங்கங்கள் தமக்குக் காணி இல்லை என நீண்டகாலமாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு காணி வழங்கப்படவில்லை. தேசிய புலனாய்வு பிரிவுக்கு நகரப் பகுதியில் காணி தேவையில்லை. அவர்கள் எங்கும் இருக்க முடியும். இரகசியமாக அவர்கள் இருக்க வேண்டியவர்கள். பொலிஸிற்குள் கூட இருக்க முடியும். அந்த இடம் பொது அமைப்புக்களுக்கு கொடுப்பது தான் பொருத்தமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.