மட்டக்களப்பிற்கு அதாவுல்லா வரக்கூடாது சொல்லும் சாணக்கியன் முட்டாளாவார்! சீறுகிறது கிழக்கின் கேடயம்

மாளிகைக்காடு செய்தியாளர்

கிழக்கு மாகாணத்தை பற்றி எதுவுமே தெரியாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சகோதரர் செந்தில் தொண்டமான் கிழக்கை ஆளும்போது இம்மாகாணத்தில் பிறந்து அதன் சுதந்திரமான சுவாசத்திற்கு பாடுபட்ட ஒருத்தரை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்ள என்ன தகுதி உள்ளது என்று கேட்க இராசமாணிக்கம் சாணக்கியன் யார்? சாணக்கியனை விடவும் ஏன் இலங்கையில் காணப்படும் முஸ்லிம் தலைவர்களை விடவும் கிழக்கு மாகாணத்தை பற்றி அதிகம் தெரிந்தவர் தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களே. அவரை பார்த்து மட்டக்களப்பினைப்  பற்றி எதுவும் அவருக்கு தெரியாது என்று சாணக்கியன் சொன்னால் அவர் ஒரு முட்டாள் என்று நாங்கள் கூறுவோம் என கிழக்கின் கேடயம் அமைப்பின் சார்பில் அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு கடந்த 13 ஆம் திகதி  நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமுகமளித்துள்ளார். இந்த கூட்டத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தை பற்றி அறியாத அதாஉல்லா எவ்வாறு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வர முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கின் கேடயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் எஸ் எம்  சபீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்;கப்பட்டவை வருமாறு –

தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே. அவர்கள் எப்போதும் தங்களது மக்கள் மாத்திரமே வாழ வேண்டும் என எண்ணுபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எல்லா மக்களும் நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள். முஸ்லிம்களின் அபிமானி போல வேடமிட்டு திருகோணமலை சண்முகா இந்து கல்லூரி விடயத்தில் இரண்டு நாள்களுக்கு பின்னர் எனக்கு எதுவுமே தெரியாது என நடித்த கோழை தான் இந்த சாணக்கியன். இவர் வடக்கு-கிழக்கு இணைய வேண்டும் என்றும் அதில் முஸ்லிம்களை அடக்கி ஆள வேண்டும் என்று விரும்புவரும் கூட.

இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் உருட்டுக்களை நாங்கள் நன்றாக அறிந்தவர்களாக இருக்கிறோம். அதனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியாவுக்கு சிறுபான்மை கட்சிகள் இணைத்து அனுப்ப இருந்த கடிதத்தை நாங்கள் முன்னின்று தடுத்து நிறுத்தினோம். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தை பற்றி அறியாத அதாஉல்லா எவ்வாறு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வரமுடியும் என்ற கேள்வியை வாபஸ் பெற்று பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.