நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வவுனியா ரயில் நிலையத்தில் வசதிகள்!

பயணிகளின் நலன் கருதி வவுனியா ரயில் நிலையத்தில் நூலக வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் வெள்ளிக்கிழமை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.

அதிகளவிலான பயணிகள் தினமும் வந்து செல்லும் வவுனியா, ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் நூலக வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகள் இல்லாத நிலைமை தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன.

இந்நிலையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் வவுனியா ரயில் நிலையத்தினர் தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பல்வேறு நலத்திட்டங்கள் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வீ.வீ.கே நிறுவனத்தினருடைய அனுசரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் நூலகத்திற்கான அலுமாரி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிலையில்  திறந்து வைக்கப்பட்டது.

வீவீகே நிறுவனத்தினர் கடந்த வருடம் முதன் முதலில் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு குடிநீர் வசதியும், நூலக வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் பின் பளை ரயில் நிலையத்திற்கும் தமது சேவையை வழங்கினர். அதனைத் தொடர்ந்து வவுனியா ரயில் நிலையத்திற்கு அந்த வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

ரயில் நிலைய அதிபரின் கோரிக்கையின் பேரில் வீவீகே நிறுவனத்தின் நிர்வாக குழுமத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் கிரிக்கட் வீரரும், வர்ணணையாளருமான ரசல் ஆர்னோல்ட், வீவீகே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்  மருத்துவர் க.உதயசீலன், வீவீகே கணக்காய்வு நிறுவனத்தின் வவுனியா கிளை முகாமையாளர் சஜிந்தன், மாங்குளம் முன்னாள் ரயில் நிலைய அதிபர் க.கலைவேந்தன், ரயில் நிலைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.