செட்டிகுளத்தில் 650 ஏக்கர் காணியை 650 குடும்பங்களுக்கு வழங்க ஏற்பாடு!  திலீபன் எம்.பி. உத்தரவாதம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 650 ஏக்கர் வயல் காணியை 650 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பல நூறு ஏக்கர் காணிகளை விடுவித்துக் கொடுக்கப்பட்டிருந்தும் அதனை 15 பேர் மாத்திரமே செய்து வருகின்றனர். இந்த வயல் காணிகளை மீளப் பெற்று தலா ஓர் ஏக்கர் வீதம் காணியற்ற 650 குடும்பஙகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாத்திற்காக நெற் செய்கையில் ஈடுபட முடியும்.

இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அரச அதிபர், பிரதேச செயலாளர், கமநலசேவை திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.