தென்கிழக்கு பல்கலை இஸ்லாம் கற்கை திணைக்களத்துக்குப் புதிய தலைவர்!

 

நூருல் ஹூதா உமர்

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின்; இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்துக்கு புதிய திணைக்களத் தலைவராக இன்று (செவ்வாய்க்கிழமை)முதல் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம். முகம்மட் நபீஸை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமித்துள்ளார்.

கலாநிதி எஸ்.எம். முகம்மட் நபீஸ் இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்தின் தலைவர் பொறுப்புக்களை கையேற்கும் நிகழ்வு, அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது பீடாதிபதி எம்.எச்.ஏ. முனாஸ் நியமனக்கடித்தத்தை கலாநிதி எஸ்.எம். முகம்மட் நபீஸிடம் ஒப்படைத்தார். அதேவேளை குறித்த திணைக்களத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆர்.ஏ. சர்ஜூன் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் புதிய தலைவர் கலாநிதி எஸ்.எம். முகம்மட் நபீஸிடம் கையளித்தார்.

நிகழ்வில் அரபுமொழி திணைக்களத்தின் தலைவர் எம்.சி.எஸ். சாதீபா உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களும் பீடத்தின் உதவி பதிவாளர் எஸ். பிரசாந்த் ஆகியோரும் பங்கு கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பீடாதிபதி முனாஸ், பீடத்தின் செயற்பாடுகளில் புதிய கலாசாரங்களைக் கொண்டுவரவேண்டும் என்றும்; அதன் ஒருகட்டமாகவே திணைக்கள தலைவர் தனது பொறுப்புக்களைக் கையேற்ற நிகழ்வு என்றும், இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்திலும் தொடரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி திணைக்களத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆர்.ஏ. சர்ஜூன் திணைக்களத்துக்கும் பீடத்துக்கும் ஆற்றிய பணிகள் பற்றி பாராட்டிப் பேசிய பீடாதிபதி, பேராசிரியர் சர்ஜூன் விட்ட இடத்திலிருந்து கலாநிதி முகம்மட் நபீஸ் தனது பணிகளைத் தொடர்வார் என்றும் அவருக்கு உள்ள பல்வேறு தொடர்புகளை வைத்து திணைக்களத்துக்கும் பீடத்துக்கும் தன்னால் முடிந்த அத்தனையையும் செய்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் பேராசிரியர் ஆர்.ஏ. சர்ஜூன், அரபுமொழி திணைக்களத்தின் தலைவர் எம்.சி.எஸ். சாதீபா ஆகியோரும் உரையாற்றியதுடன் பீடத்தின் உதவி பதிவாளர் எஸ். பிரசாந்த் நன்றியுரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.