சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட நால்வர் மத்ரஸா மாணவன் மர்ம மரணம் குறித்து கைது

 

பாறுக் ஷிஹான்

மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருள்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30, 26, 22, 23 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.

அத்துடன் கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் நாளை(புதன்கிழமை) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்திருந்ததுடன் நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.