ஈழத்து இசைக்குயில் கில்மிஷாவுக்கு வவுனியாவில் சிறப்பாக பாராட்டு விழா

இந்திய சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப வெற்றிநாயகி ஈழத்து இசைக்குயில் கில்மிஷா உதயசீலனுக்கு வவுனியாவில் பாராட்டு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

வைத்தியரும், சமூக செயற்பாட்டாளருமான மதிதரனின் தலைமையில் வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை இந்தப் பாராட்டு விழா இடம்பெற்றது.

சரிகமப நிகழ்வில் வெற்றி பெற்றமைக்காக ஈழத்து இசைக்குயில் கில்மிஷா உதயசீலனுக்கு பலரும் பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், வாழ்த்து மடல்களையும் வழங்கியிருந்தனர்.

அத்துடன், வவுனியாவின் கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் இசை நிகழ்வும், கில்மிஷா உதயசீலன் அவர்களின் பாடல்களும் இடம்பெற்றதுடன், கில்மிஷா உதயசீலன் அவர்களை கௌரவித்து விழா ஏற்பாட்டுக் குழுவால் ஒரு இலட்சம் ரூபாய் பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன்,  வவுனியா நகரசபை செயலாளர்  இ.தயாபரன் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இசைக்குயிலை வாழ்த்திச் சென்றனர்.