வவுனியா உமாமகேஸ்வரன் சமாதி அருகில் புளொட் மூத்த தலைவர் உடல் அடக்கம்!

வவுனியா, கோவில்குளம், சிவன் கோவிலருகில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சமாதி அருகில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த தலைவர் ராகவனின் உடலும் இன்று (25.02) அடக்கம் செய்யப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் சிரேஸ்ட உபதலைவருமான ராகவன் அல்லது ஆர் ஆர்  என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் அவர்கள் அண்மையில் சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

அவரது உடல் வவுனியா, கோவில்குளம், சிவன் கோவிலருகில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் சமாதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரைகளையும் ஆற்றினர். அதன் பின் மறைந்த ராகவனின் உடல் கோவில்குளத்தில் உள்ள உமா மகேஸ்வரன் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் மற்றும் ஊடகப் பேச்சாளர் துளசி, ஈபிடிபி கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறிகாந்தா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.கஜதீபன், செந்தில்நாதன் மயூரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், புளொட் அமைப்பு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

100