தென்;மராட்சியில் அலைகடலெனத் திரண்ட 2024 தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்.

 

தமிழ்த் தேசியம் சவாலுக்கு உட்படுத்தப்படும் பொழுதெல்லாம் தமிழ்த் தேசியத்தின் இருப்பை உரத்து உழகுக்குப் பறைசாற்ற யாராவது தோற்றம் பெறுவது இயல்பு.
அது திட்டமிடப்பட்டு நிகழாது எதேச்சையாக தானாக நிகழும்.

அப்படித்தான் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியினை புத்துயிரூட்டும் வகையில் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட இளைஞர் குழாமின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு 25 பெப்ரவரி மாதம் 2024 ஞாயிறு காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் ஆரம்பித்து இந்த மாலை பொழுதில் நிறைவுற்று இருக்கின்றது.

இம்மாநாடு தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை திண்ணமும்
எண்ணமுமாகக் கொண்ட சில இளைஞர்களின் குறுகிய கால அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தமிழர் தாய் நிலப்பரப்பெங்கும் வாழ்கின்ற அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி எல்லா பிரதேசங்களில் இருந்தும் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் இந்த அரங்கில் ஒன்று திரண்டிருப்பது புதிய நம்பிக்கையின் வாசல்களை திறந்து விடப் போதுமானது.

இன்றைய இம்மாநாட்டைத் தொடர்ந்து கிழக்கிலும் தெற்கிலும் மலையகத்திலும் இவ் எழுச்சி பயணம் தொடரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த தடைகளை வெல்லும் தமிழ்த் தேசிய நிகழ்வு மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் செயற்ப்படுத்த வேண்டியதுமான முன்மொழிவுகள்

1. தமிழ்த் தேசியம் மட்டுமே தமிழரின் அபிலாசைகளை நிறைவேற்றும் அதுவே எம் இருப்பின் தாரக மந்திரமும் ஆகும் .

2. தமிழ்த் தேசிய அரசியலின் முக்கியத்துவத்தை சர்வதேச அரங்கில் அதன் எதிர்பார்க்கைகளோடும் முன் வைப்பதனை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

3. மக்களுக்கான புதிய அரசியல் உந்து சக்தியாக இளைய தலைமுறையை முன்னிறுத்தி அரசியல் களப்பணியை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிப்பதை இம்மாநாடு முன்மொழிகிறது.

4. ஆயுதப்போர் மௌனிக்கச் செய்யப்பட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து முன்னெடுப்புகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதையும் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய நடைமுறைப்படுத்தப்படும் பிரித்தாளும் தந்திரோபாய வழிமுறைகள், பற்றிய விழிப்புணர்வும் இளைய தலைமுறைக்கு முன் நகர்த்தப்படுவதை இம்மாநாடு முன்மொழிகிறது.

5. ஆயுதப்போர் மௌனித்துப் போனாலும் ஒன்றரை தசாப்தம் கடந்தும் யுத்தத்தால் பாதிப்புற்று இன்றுவரை மீள முடியாத வாழ்வியல் அவலத்தில் உழலும் மக்களின் மீட்சியை உறுதிப்படுத்தவும் அவர்கள் தமது சொந்தக் காலில் நிலைபெறவும் நடைமுறைச் சாத்தியமான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல் படுத்தப்படுவதை தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு முன்மொழிகின்றது .

6. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தவிர்க்க முடியாத தாயக பூமியாகும். இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம் அனைத்துத் தளங்களிலும் உறுதிப்படுத்தப்படுவதை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

7. தமிழ்த் தேசிய எழுச்சியின் குரல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் சமூகங்களின் உரிமை, இருப்பு, அரசியல், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, விழுமியம், சமயம், கலை, கலாச்சாரம், இலக்கியம், ஊடகம், தொழில்வாய்ப்பு, நிலம், நிருவாகம் சார்ந்த அனைத்திலும் தனித்துவமாக உறுதிப்படுத்தப்படுவதை ஆதரித்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

8. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்து மக்களினதும் அரசியல் அபிலாசைகள் அரசியல் வியாபாரிகளின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டு இளைய தலைமுறையின் பங்கு பற்றுதலோடு மக்களின் குரலாக தேசிய அளவில் மாற்றப்படுவதையும் போலி தமிழ் தேசியவாதிகளின் பிடியிலிருந்து தமிழ் தேசிய அரசியலை மீட்டு அதன் தூய வடிவில் இளம் தலைமுறையிடம் கையளிப்பதையும் இம்மாநாடு ஆதரிக்கின்றது

09. துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்ட பேரவை ஸ்தாபிக்கப்பட்டு அறிவார்ந்த வழிகாட்டுதல்களை துறை சார்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு தமிழ் தேசியத்தின் கனவுகளையும் லட்சியங்களையும் சாத்தியப்படுத்துவதற்கான சாதகமான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை இம்மாநாடு முன்மொழிகிறது

10. தமிழ் தேசத்தின் தவிர்க்க முடியாத ஜீவ நாடியாகத் திகழும் பெண்களின் பங்கு பற்றுதலை அனைத்துத் துறைகளிலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இம் மாநாடு ஆழமாக முன் வைக்கிறது

*ஒற்றைத் தமிழன் வாழ்ந்தாலும்
தரணியெங்கும் ஒலிக்கும் தமிழனின் தேசியக் குரல்
ஓங்குக தமிழின் புகழ்
பாராளட்டும் தமிழரின் மாண்பு*