பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சிக்காக திருகோணமலையில் இருந்து புறப்படுகிறார் தன்வந்!

ஹஸ்பர் ஏ.எச்

இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு புதன்;கிழமை காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் கருத்து வெளியிட்ட ஹரிஹரன் தன்வந், மார்ச் மாதம் முதலாம் திகதி இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து அதிகாலை 12.05 மணிக்கு நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் பியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீச்சலில் பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் முயற்சி காணப்படுகிறது.

கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை அகற்றி, கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருத்தல், விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஆமை முதலான கடல்வாழ் உயிரினங்களை  பாதுகாத்தல், முருகைக் கற் பாறைகளின் முக்கியத்துவத்தை பேணுதல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சலில் ஈடுபடவுள்ளேன்.

நான் திருகோணமலை ஈ.கி.ச. இந்து கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்று வருகிறேன். கடந்த நான்கு வருடங்களாக நீச்சல் பயிற்சி பெற்று வருகிறேன். – என்றார்.