இணைந்து போவாரா எம்.ஏ. சுமந்திரன்?

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்;படி வழக்குத் தாக்கல் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கனது கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது பெப்ரவரி 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு இன்றைய தினம் யாழ் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவிருந்த நிலையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இம்மாநாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 15.02.2024 முதல் எதிர்வரும் 27.02.2024 ஆம் திகதி வரை குறித்த மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் சந்திரசேகரம் பரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இவ்வாறு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது கடந்த 21.01.2024 மற்றும் 27.01.2024ஆம் திகதிகளில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டங்ளும், குறித்த இரண்டு கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளும் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றதும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது இதனை எதிராளிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். சுமந்திரன் தாயாரின் இறுதிக்கிரியை காரணமாக மன்றுக்கு சமுகமளிக்காதமையால் அவரின்; சம்;மதத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றம்

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.