கல்முனையில் திண்மக் கழிவகற்றலை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

 

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகரில் திண்மக் கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழனன்று நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் அமைப்பின் தலைவர் வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.பாயிஸ், கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி முர்ஷித் முப்தி, உப தலைவர் மௌலவி அப்துல் ஹமீட் உட்பட மனிதவள அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதன்போது கல்முனை மாநகரம் திண்மக் கழிவகற்றல் செயல்பாடுகளில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்கள் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், கல்முனை மாநகர சபைக்கு பொது மக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்புகள், அதற்கான வழிகாட்டல்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் திண்மக்கழிவகற்றல் சேவையை வினைத்திறன் மிக்கதாகக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அதேவேளை கல்முனை மாநகர சபையை பொறுப்பேற்றமை முதல் கடந்த ஒன்றரை வருட காலமாக வினைத்திறனுடன் நேர்த்தியான சேவைகளை வழங்கி வருகின்ற ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களை கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு மற்றும் கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பன இணைந்து நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளன.