கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அண்மித்த வீதியை விசாலமாக்க முடிவு!

நூருல் ஹூதா உமர்

சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் அமைந்துள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள கடற்கரை வீதி மக்களின் அதிக வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், வெள்ளிக்கிழமைகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைவதையும் கவனத்தில் கொண்டு அந்த வீதியை விசாலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இந்த களவிஜயத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை, மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. ஹலீலுர் ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர்கள் உட்பட கல்முனை மாநகர சபை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த பிரதேசத்துக்கு விஜயம் செய்யும் பொதுமக்களின் வாகனங்களின் தரிப்பிடம் தொடர்பிலும் கவனம் செலுத்தியதுடன் குறித்த வீதியை விரிவாக்கத் தேவையான விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தை மின்விளக்குகள் மற்றும் இருக்கை வசதிகளைக் கொண்டு அழகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தேவையான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. வேலைத்திட்டம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை முன்னெடுக்கிறது