விகிதாசார தேர்தல் முறைமையால்  அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் செய்யப்பட்டன. மு. கா. பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கருத்து

கே எ ஹமீட்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறைமையால்  அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,சம்மாந்துறை,பொத்துவில் தொகுதிகளில் இருந்து ஒவ்வொரு பொதுத்தேர்தல்களிலும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்து வந்த மூன்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் செய்யப்பட்டன என சம்மாத்துறை 11,12,வீரமுனை 04 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்புக்கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

தொகுதி அடிப்படையில் தேர்தல் நடைபெற்ற போது மூன்று தொகுதிகளில் நமது சமூகத்தை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

விகிதாசாரத் தேர்தல் முறைமையால்  பல தடவைகள் மூன்று தொகுதிகளிலும் நமக்கான மூன்று உறுப்பினர்களையும் பெற முடியாத சூழ் நிலை ஏற்பட்டது.

சம்மாந்துறைக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் எல்லோரும் உடன்படுகிறோம். அம்பாறை மாவட்டத்தில் மூத்த பிரதேசமாகவும், ஆகக்கூடிய மக்கள் வாழும் பிரதேசமாகவும் சம்மாந்துறை பிரதேசம் அமைந்துள்ளது. அது மாத்திரம் இன்றி கடந்த காலங்களில் சம்மாந்துறை அரசியல் அதிகாரம் தான் அம்பாறை மாவட்டம் முழுவதும் பணிசெய்த வரலாறு உள்ளது.

அகில இலங்கை சோனகர் சங்கத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் பதவியில் நான் இருந்த போது நமது சமூகத்தின் மூத்த தலைவர் சேர் ராசிக் பரீட் இறையடி சேர்ந்தார்.
அவருக்கான முதலாவது அனுதாபக் கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் எல்லோரும் தீர்மானித்தோம். அம்பாறை மாவட்டத்தில் எல்லா அரசியல் பிரமுகர்களையும் இந்நிகழ்வுக்கு அழைப்பது எனவும் தீர்மானித்தோம். நமது மாவட்டத்தில் மூத்த அரசியல்வாதியும், அமைச்சரும் மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களை அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சந்தித்து மறைந்த சேர் ராசீக் பரீட் அவர்களுக்கு இலங்கையில் முதலாவது அனுதாப கூட்டத்தை அட்டாளைச்சேனையில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இந்த நிகழ்வில் தாங்களும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தோம். மர்{ஹம் எம்.ஏ. அப்துல் மஜீத் அவர்கள் ஆச்சரியம் அடைந்து இளைஞர்களாகிய எங்களுடைய முயற்சியை பாராட்டினார். அன்றைய தினத்தில் அவருக்கு மிக முக்கியமான நிகழ்வு இருந்ததை இரத்து பண்ணிவிட்டு சேர் ராசீக் பரீட் அவர்களின் அனுதாப கூட்டத்தில் கலந்து சிறப்பித்தார்.

சம்மாந்துறைகான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பெறுவதற்கான நடவடிக்கையில் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை புனரமைத்த பின் சம்மாந்துறை சமூகத்திடம் பேச்சில் ஈடுபட வேண்டும்.சம்மாந்துறைக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு பெறலாம் என்ற புதிய சிந்தனைகளும் வெளியாகியுள்ளன.சம்மாந்துறையில் இயங்கிவரும் அரசியல் கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளையும் ஈடுபட வேண்டும்.எல்லோரினதும் ஒத்துழைப்பையும் பெற்று சம்மாந்துறைக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளமையும்,  நடைபெற்ற ஒரு பொதுத்தேர்தலில் சம்மாந்துறை மக்கள் அதிகமான வாக்குகளை சுயேச்சைக்குழுவுக்கு அளித்த போதும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை என்பதுதான் யதார்த்தமாகும்.

எனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஊடாக ஒற்றுமைப்பட்டு சம்மாந்துறை சமூகத்துடன் பேச்சுகளை மேற்கொண்டு சம்மாந்துறைகான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

விகிதாசார தேர்தல் முறையில் பல பிரச்சினைகள் உள்ளன. தெரிவு வாக்குவிடயத்தில் ஒரே கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்தியில் போட்டி ஏற்படும் நிலைமையும் உருவாகியுள்ளது.

இது நமது கட்சிக்குள் மாத்திரம் உள்ள பிரச்சினை இல்லை. எமது நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இப் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன.  நமது கட்சி  பொதுத்தேர்தலில் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டால் நாம் அச்சம் அடையத் தேவையில்லை. எப்படியும் மரச்சின்னத்துக்கு வாக்களித்தால் எமது கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார்கள்.
ஏனைய கட்சிகளோடு இணைந்து தேர்தலில் கூட்டணியாக போட்டியிடும் போது நாம் நமது கட்சியின் வேட்பாளர் மூவருக்கும் நமது தெரிவு வாக்குகளை அளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்குள்ளது.

ஒரு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களாக 03  முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டு 33ஆயிரம் முஸ்லிம்  வாக்குகளை ஐ.தே.கட்சியின் சின்னமான யானை சின்னத்துக்கு அளித்தனர்.மூன்று முஸ்லிம்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தே 33 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை அளித்தார்கள் தேர்தல் முடிவில் அம்பாறை தொகுதியில் இருந்து  தயாரத்ன,கலபதி, பக்மீபவ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

முஸ்லிம் வேட்பாளர்கள் எல்லோரும் தோல்வி அடைந்த வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது.
கட்சிக்கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதால் பல நன்மைகள் ஏற்பட்டு வருகின்றன.

மக்கள் பிரதிநிதிகளும்,கட்சி பிரமுகர்களும் மக்களை சந்தித்து கட்சி செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.நமது கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் (எம்.பி)அவர்களின் பணிப்புரையின் கீழ் கட்சிக் கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மக்கள் சந்திப்புக்கள், கட்சிக் கட்டமைப்புக்கள் ஏற்படுத்துதல், கிராம மட்டத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி கட்சி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கட்சி செயற்பாடுகளில் புதிய இளைய தலைமுறைகளை இணைத்து கொண்டு கிராம மட்டத்தில் மகளிர்களை ஒன்று திரட்டி மகளிர் மத்தியில் கட்சி ஆதரவாளர்களை இணம் கண்டு எமது கட்சியில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுத்தல் வேண்டும்.
தற்போது 22 வயதை அடைந்த இளைஞர்களுக்கு பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்ன சூழ் நிலையில் நமது சமூகத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் என்பதனையும், அன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அறிவதற்கு நமது இளைஞர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

எனவே நமது இளைஞர்களுக்கான இடத்தை இப்போதிருந்த நாம் வழங்கி கட்சி செயற்பாடுகளில் நமது  இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், வீரமுனை வட்டார வேட்பாளர் தபீக் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். (05)