ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் அதா உல்லா எம்.பியுடன் விசேட சந்திப்பு

பாறுக் ஷிஹான்

தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதா உல்லாவை (எம்.பி) அட்டாளைச்சேனை ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் சந்தித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினர்.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவராகவும் செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு நிதியொதுக்கீடுகளை செய்துவருகின்றார்.

இந்நிலையில் அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவிலும் வீதிகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது குறித்த பகுதியில் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ள கடற்கரை வீதி, ஆற்றங்கரை வீதி ஆகியவற்றின் தற்போதைய நிலை தொடர்பாகவும், குன்றும் குழியுமாக காணப்படும் உள்ளக கிறவல் வீதிகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன் குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும், சட்டத்தரணியுமான ஏ.எல்.நியாஸ், தேசிய காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளரும், அரசியல் உயர்பீட உறுப்பினருமான எஸ்.ஏ.பாயிஸ், தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவு அமைப்பாளர் ஏ.எல்.மனார், ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல்.பெரோஸ் கான் செயலாளர் ஜே.சஜித், பொருளாளர் பீ.பஸ்லி, முகாமையாளர் சிபாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். (05)