15 வருட தலைமைத்துவத்துக்காக எம்.ஐ.ஏ. ஜப்பாருக்கு கௌரவம்!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சுமார் 15 வருட காலம் சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்திற்கு சிறப்பான தலைமைத்துவம் வழங்கியமைக்காக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார் பாராட்டி கௌரவிக்கபட்டுள்ளார்.

சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.

நிதியத்தின் தலைவர் ஐ.ஏ. குத்தூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் திருமதி என்.வி.எம். லரீப் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் ஏ. உதுமாலெப்பை, சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முகம்மட், விடயத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. சாஜிதா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாக இந்நிதியத்தின் தலைவராக உன்னத பணியாற்றிய ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ. ஜப்பார், பாராட்டுரைகளுடன் அதிதிகளால் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஊர், சமூக நலன்சார் விடயங்களுக்காகவும் ஓய்வூதியர்களின் நலன்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைக்கின்ற அப்துல் ஜப்பாரின் சேவைகள் காலத்தால் அழியாத மகத்தான பணிகளாகும் என்று இதன்போது புகழாரம் சூட்டப்பட்டார்.