கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளவுள்ள கோடீஸ்வரன்

தமிழர்கள் தங்கள் உரிமைகளை கோரி தொடர்ச்சியாக 20 நாட்களுக்கும் மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராடி வருகின்றனர். இன்று பெயர்கள், இடம் ,வளம் என அணைத்தும் மாற்றப்பட்டுகொண்டிருப்பதாகவும் குறிப்பாக கல்முனைக்குடி கல்முனை என மாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் (super star sports club)விளையாட்டு கழகத்தின் T- shirt அறிமுக நிகழ்வின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வின் போது, எங்கள் நிலத்தை நாங்கள் இழக்கின்ற போதும் எங்கள் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன .முதல் முதலாக நாடாளுமன்றத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான நிர்வாக பிரச்சனைகளை எடுத்துரைத்தவன் நான்.மேலும் சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நிர்வாக பிரச்சனை தொடர்பாகவும் அது ஒரு மனித உரிமை மீறல் எனவும் அது கிடைக்கப்பெற வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 வது கூட்டத்தொடரில் பேசியவன் என்பதையும் யாரும் மறந்துவிட முடியாது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக தொடர்பாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதோடு அடுத்த கட்ட நகர்வாக எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் இது தொடர்பாக பல நிபந்தனைகளை முன்வைக்க போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் கணக்காளர் தொடர்பான சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும் எனவும் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கு கொள்வது எங்கள் ஒவ்வொருவரது தார்மீக கடமை எனவும் கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்,தமிழர்களின் அடையாளம் அதனை யாரும் மறந்துவிட முடியாது நீங்கள் மறக்கவும் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.