பிரதான போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது

போதைப்பொருள் வர்த்தகரான “பயாகல தோரா”வின் பிரதான உதவியாளரான “பயாகல சுட்டு” பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை பயாகல – கலமுல்ல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது, ​​களுத்துறை சிறைச்சாலையில் இருந்து “பயாகல தோரா” என்பவர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக பணப் பரிமாற்றம் செய்யும் முறையின் ஊடாக இந்த சந்தேக நபர் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொடங்கொடை, பயாகல, மத்துகம, வெலிபென்ன, களுத்துறை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த ஐஸ் போதைப்பொருள் வர்த்கத்தை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

பயாகல வடுகொடை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.