மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் திரண்ட பொது மக்கள்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அனுமதியில்லாத நிலையில் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மாவட்ட செயலகத்தில் இரு அணிகளுக்கு இடையே பதற்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெருகல் தொடக்கம் காயன்குடா வரையில் முன்னெடுக்கப்படவுள்ள இல்மனைட் அகழ்வு மற்றும் வாகரை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள இறால் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வாகரை பிரதேச பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது இல்மனைட் அகழ்வுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அதற்கு எதிரான பதாகைகளையும் தாங்கியவாறு போராட்டம் முன்னுடுக்கப்பட்டது.

போராட்டம் நிறைவடைந்ததும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கையினை முன்வைப்பதற்காக சென்றனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் இல்மனைட் அகழ்வு மற்றும் இறால் பண்ணைகளுக்கு ஆதரவானவர்கள் நின்றிருந்தபோது இரண்டு பிரிவினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் வாகரை பிரதேசத்தினை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.