வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் 1,371 முறைப்பாடுகள் பதிவு

2024 ஆம் ஆண்டின் 4 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1,371 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான உரிமம் இல்லாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், பணம் வசூலித்தல், சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு மக்களை வழிநடத்துதல் போன்ற புகார்கள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.

பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 495 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் இக்காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களுக்கு ரூ. 53,509,520 பணத்தையும் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மேலும் 680 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்காக மோசடி செய்பவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

​​வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்த மற்றும் முறையான பணி உத்தரவைப் பெறாமல் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த 8 முகவர் நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.