பொருளாதாரத்தை சரியாக கட்டமைப்பேன் – ஜனாதிபதி உறுதி

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

சரிவடைந்த பொருளாதாரத்தை இரு வருடங்களில் மீட்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ள நிலையில்  வீழ்ச்சியடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐ.டி.சி ரத்னதீப விருந்தக கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது.ஜனாதிபதியின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவே மக்கள் அதில் பங்கெடுத்தனர்.இருப்பினும் அந்த பொருளாதார சரிவிலிருந்து இரு வருடங்களில் நாட்டை மீட்டெடுக்க முடிந்துள்ளது. தற்போது கொழும்பு சுற்றுலா நகரமாக மாறியுள்ளது.சரிவடைந்த பொருளாதாரத்தை சுற்றுலா வியாபாரத்தினால் துரிதமாக மீட்கலாம்.அதற்கான வசதிகளை வழங்க தங்களது தரப்பினர் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.