மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் நினைவேந்தல்

(கஜனா சந்திரபோஸ் )

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்  தராக்கி டி.சிவராம் ன் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பில் நடைபெறற்றது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நேற்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக அமையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வில் இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கலந்துகொண்டிருந்தனர்.

தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில்  ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். யசிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்ப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

ஆரம்பக் கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.

சிவராம் ‘தராகி’ என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ”The Island” ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன

.