நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற பாதாள உலக சந்தேகநபர் கைது

பாதாள உலக தலைவன் அங்கொட லொக்காவின் நண்பன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான சிட்டி எனப்படும் எல்லாவலகே சரத் குமார், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய புறப்படும் முனையத்தில் நிறுவப்பட்ட தானியங்கி முக அங்கீகார அமைப்பு (AFRS) மூலம் அடையாளம் காணப்பட்ட பின்னர் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள உலகக் குற்றக் கும்பல் ஒன்றின் தலைவனான அங்கொட லொக்காவின் பிரதான சீடன் என சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் முல்லேரியாவில் வசிக்கும் 47 வயதுடையவர்.
ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இவர் கடந்த 19 ஆம் திகதி 510 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 2011 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொன்றது, துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.